எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 8

subasini

Moderator
மனம்- 8

நாளும் கிழமையும் கடந்து சென்றது…

அதியமான் பல கஷ்டங்களைக் கடந்து தன் தம்பியைக் காப்பாற்றியிருந்தான்.

சதீஷ் எழுந்து நிற்க அவன் பட்டக் கஷ்டங்கள் வார்த்தைகளில் சொல்லிமாளாது…

அவன் நிற்க எடுத்துக் கொண்ட‌ இரண்டு நிமிடம்… வலியின் காரணமாக அவனுக்கு ஒரு யுகமாகக் கடந்தது…

வலியில் பல இரவுகள் கத்தி அழுதவனின் செயலில், அடுத்து இருந்து அவனைத் தேற்றி வருவதற்குள் அதியமானின் மனமோ பல முறைச் செத்துப் பிழைத்தது.


அவன் மனதில் இருக்கும் வைராக்கியம்…
தன் தம்பியை நடமாட வைத்து அவன் காதலை அவனுக்குக் கொடுப்பது.

அது தான் இன்றைய காலகட்டத்தில் அவன் லட்சியமாக இருந்தது.

அதில் தன் தொழில் பொறுப்புகளை எல்லாம் தன் தோழனும் தன் பார்ட்னருமான இனியனிடம் ஒப்படைத்து இருந்தான் அதியமான்.

அதனால் புதிய புராஜெக்டில் ஆட்களைத் தேர்வுச் செய்யும் குழுவில் அவன் பங்கேற்க வில்லை... வேலைப் ‌பளுவின்‌க்காரணமாகத் தேர்வர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புகளைத் தங்கள் கீழ் பணிபுரியும் ஆட்களை நியமித்து இருந்தான் இனியன்.

அதனால் அவர்கள் கம்பெனியில் பணியில் தாரா, சேர்ந்திருந்தது இருவருக்கும் தெரியவில்லை.

இது காலத்தின் விளையாட்டா.. இல்லை விதியின் காய் நகர்ந்தாலா என்பது புதிராகிப் போனது.

இன்றைய காலகட்டத்தில் இதெல்லாம் சுலபமாகத் தெரிந்துக் கொள்ளலாம். ஆனால் தாரா இருந்த மனநிலையில் ‌தான் வேலைச் செய்யும் கம்பெனியில் முதலாளிகள் இருவர் என்று தெரிந்து வைத்திருந்தாள் பெயரும் தெரிந்து இருந்தது, அவர்கள் அதியமான் மற்றும் இனியன் என்பது தான் தெரிந்து கொள்ள அவள் முயலவில்லை. அவளுக்குத் தேவையில்லை என்று நினைத்தாள்.

எது எப்படியோ அவர்களின் வாழ்க்கையில் இந்த விதியின் காய் நகர்த்தல் எப்படி யாரை எங்கே நிறுத்தி வைக்கும் என‌‌ எதிர் காலம் சொல்லும்.

அதியமான் வீட்டில் சதீஷ் நல்ல படியாகக் குணமாகி வந்ததால் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார் அவன் அம்மா சாந்தி.

பிள்ளைகள் இருவரையும் இருத்திப் பூஜை முடிய மதியம் ஆகி விட்டது.

உணவருந்திவிட்டு இளைப்பாறிக் கொண்டிருந்தனர் மூவரும்.

அப்போது அதியமான் “ அம்மா உங்களிடம் சில விஷயங்கள் பேசணும்” என்று‌ப் பீடிகையிட்டான்.

"என்ன தம்பி... சொல்லு" என்றார்.

“ சதீஷிற்கு நான் ஒரு பொண்ணைப் பார்த்து வச்சு இருக்கேன். அவளைத் தான் அவனுக்குத் திருமணம் செய்ய வேண்டும்” என்றான் தாயிடம்.

“என்ன தம்பி பேசற... அண்ணன்‌ நீ‌ இருக்க... தம்பிக்கு எப்படிக் கல்யாணம் செய்வது” என்றார் அவன் அம்மா சாந்தி…

“நீங்கள் சொல்வது சரிதான்… எனக்கு இப்போது கல்யாணம் பண்ணணும்னு என்ற எண்ணமே இல்லை அம்மா… முதலில் தம்பிக்கு முடிக்கலாம்” என்றான் தீர்மானமாக.

தன் பெரிய மகன் என்ன சொன்னாலும் தட்டாமல் பின் பற்றும் சாந்தி, சரி என்று தலையை ஆட்டி வைத்தார்.

தன் அண்ணனின் வார்த்தைகளைக் கேட்டுச் சதீஷ், இரண்டு நாட்கள் முன்பு அதியமான் தன் காதலைப் பற்றியும் தாரிகாவைப் பற்றிய நினைவு இருக்கிறதா என்று விசாரித்தது இதற்குத் தானா...

அவள் என்ன செய்கிறாள் என்று தெரியவில்லை… அவள் அலைபேசியின் தொடர்புத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல் மட்டுமே கிடைத்தது.

தனக்கு நடந்த விபத்தின் காரணமாக அவன் பல விஷயங்களை மறந்ததிருந்தான் அதில் தன் தோழி நளினியின் வரிசையில் ,தங்கள் காதலின் சின்னமாகத் தாரிகா வயிற்றில் தங்கள் வீட்டின் வாரிசு இருந்ததும், அதனால் தான் தாராவின் கோபத்திற்கு ஆளானதும், இதையெல்லாம் மறந்ததிருந்தான் சதீஷ்.

அதனால் அவன் தன் அண்ணனிடம் காதலை மட்டுமே சொல்லி இருந்தான்.

தங்கள் வாரிசுத் தாராவின் கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பது தெரியாமல், அதியமான்... சதீஷின் காதலை நிறைவேற்றி வைக்கும் எண்ணத்தில் தீவிரமாக இருந்தான். அந்நேரம் அவன் கண் முன் தாராவின் முகம் வந்து போனது.

இவர்களுக்குத் திருமணம் என்றால் என்ன செய்வாள் என்று சிந்தித்துப் பார்த்தான்.

கலைந்த கேசமும் கசங்கிய ஆடையும் உறக்கம் இல்லாத‌ விழிகளும் என்று, அவன் சிந்தனையின் முன்னே தரம் இறங்கி இருந்தாள் தாரா.


எதிலும் ஆர்வம் இல்லாமல் வெந்ததைத் தின்று வாழ்ந்து வந்தாள் தாரிகா. அவளின் போக்கில் சந்தேகம் வந்தது புனிதாவிற்கு. எந்தக் கவலையோ வேதனையோ எதுவானாலும் தாராவிடம் பகிர்ந்துப் பழகியதால் அவளுக்கு அழைத்து “என்னடி நம் தாரிகா எதோ போல் இருக்கிறாள்… அவளுக்கு என்னாச்சு.. உடம்பு எதாவது சரியில்லையா… அவளிடம் கேட்டாள் எதுவும் இல்லை என்று சொல்லறாள்… எனக்குப் பயமாக இருக்கிறது” என்று புலம்பினாள் அவள் தாய்.

"அப்படியா அம்மா… நீங்கள் எதுவும் கவலைப் பட வேண்டாம்… நான் பேசறேன் அவளிடம்…சொல்கிறாளா என்று பார்க்கலாம்"… எதுவும் தெரியாதது போல் பேசி வைத்தவள் வேகமாகத் தாரிகாவிற்கு அழைத்தாள்.

“என்னடி ஆச்சு.. ஏன் இப்படி இருக்கிற… அம்மா பாருப் பயபடறாங்க”…என்றாள்.

“தெரியவில்லை தாரா... நான் தப்புப் பண்ணறேனோ என்கிற மன உறுத்தல் இருந்து கொண்டே இருக்கு. குட்டி எப்படி இருக்கான் நல்லா இருக்கானா? அவனுக்கு அநியாயம் பண்றேன் என்று மனசுலக் குற்ற உணர்வு என்னைத் தூங்க விடாமல் செய்கிறது... என்ன பண்ண என்று தெரியவில்லை தாரா” என்றாள் தரிகா.

தாரிகாவின் குரலிலோ துயரம் மண்டிக் கிடக்க... அழும் நிலையில் இருந்தாள். ஆனால் அழுதாலோ வீட்டில் இருப்பவர் கேட்கும் கேள்விக்குப் பதில் கூறிச் சமாளிக்க முடியாது என்ற காரணத்தினால் தான் அழுகையை மென்று தின்றாள்.

மீண்டும் தாராவிடம் "சதீஷ்க்கு நினைவு வந்திருக்குமா? தாரா… அது வேறு பயமாக இருக்கு … அவர் என்ன மறந்து இருந்தால்… எங்கள் காதல் அவருக்கு நினைவிலேயே இல்லாமல் போயிருந்தால்… என்ன பண்ண இதற்கு மேல் எப்படி வாழ்க்கையைக் கொண்டு செல்ல என்று எதுவுமே தெரியாமல் கண்ணைக் கட்டி விட்டது போலத் தோற்றம் மனதில்… அப்பாவும் அம்மாவும் ஏதாவது கேட்டால் என்ன பதில் சொல்வது என்றும் தெரியவில்லை” என்று குழப்பமான மனநிலையில் தன்னுடைய உணர்வுகளை எல்லாம் தாராவிடம் பகிர்ந்தாள் தாரிகா.

தன்னுடன் பிறந்தவளின் வேதனையும் குழப்பமும் நன்றாகப் புரிந்தது தாராவிற்கு.
ஆனால் அதியமானின் மனநிலை ஓரளவிற்குப் புரிந்துக் கொண்டதால் கண்டிப்பாகத் தாரிகாவைத் தேடி வருவான் என்று நம்பினாள்.

சதீஷின் காதலை எக்காரணம் கொண்டும் தோல்வியடைய விட மாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு அதியமான் மேல் இருந்தது.

அதனால் தாரிகாவிடம்
“நீ தைரியமாக இரு... கண்டிப்பாக உன் காதல் நிறை வேறும்… உன் காதல் மேல் உனக்கே நம்பிக்கை இல்லையென்றால் எப்படித் தாரிகா? நீ உண்மையாகத் தானே இருந்தாய் உன் காதலில், அந்த உண்மை உன்னை உன் காதலனிடம் கூட்டிச்செல்லும்” என்று நம்பிக்கை வார்த்தைகளை அவளுக்குக் கொடுத்தாள்.

“புரியுதுத் தாரா நம்பிக்கைத் தானே... ம்ம் நம்புகிறேன்” என்றாள் தாரிகா.

“அதையெல்லாம் விடு உன்னுடைய வேலை எப்படிப் போகிறது என்று சொல்லு, பள்ளியில் எல்லாம் பிள்ளைகள் படித்துக் கொள்கிறார்களா” என்று அவளின் மனநிலையை மாற்றினாள் தாரா.

“உண்மையில் அழகான பூந்தோட்டம் தான் பள்ளிக்குச் செல்வது… அழகழகான குழந்தைகள் அவர்களின் மழலை மொழி என்னை எல்லாம் மறக்கச் செய்வது உண்மைதான்… ஆனால் குட்டியின் ஞாபகம் அப்பொழுதுதான் அதிகமாக வருகிறது”… என்றாள் தாரிகா.

“எனக்கு இந்தத் தண்டனைத் தேவைத் தான்... பெற்றோர்களின் பேச்சுக் கேட்காமல் பருவ வயதின் உணர்வுகளுக்குக் கவனம் செலுத்திக் காதலில் விழுந்தேன் இல்லையா! எனக்கு இந்த வேதனைத் தேவைத் தான்! என்று பல நேரங்களில் தோன்றுகிறது” என்று குரல் உடையக் கூறினாள் தாரிகா.

"என்னடி இப்படி எல்லாம் பேசுகிறாய், எல்லாம் சரியாகிவிடும், எல்லாமே சரியாகத் தானே செய்திருக்கிறோம். அப்புறம் என்ன உனக்கு... விடுப்பார்த்துக்கலாம், உனக்கு வருத்தமாக இருக்கிறதா... உன்னுடைய மகன் என் கைகளில் என்ற எண்ணம்” என்று கேட்டாள் தாரா.

“தாரா! என்ன வார்த்தைப் பேசுகிறாய் நீ … என்னைப் பெத்தவங்க இருந்த போதிலும், நீ தான் எனக்கு அம்மா அப்பாவைப் போல… என்னுடைய எல்லா இடத்திலும் அவ்வளவு உறுதுணையாக இருந்திருக்கிறாய்… நான் செய்தது சரியா? தவறா? என்று ஆராயாமல் உடன் பிறந்தவள் என்பதற்குச் சிறந்த உதாரணமாகக் கூட இருந்து… என் தவறைச் சரி செய்து கொண்டிருக்கிறாய்… நீ இப்படி எல்லாம் பேசாதே… நீ என்ன சொன்னாலும் அதை நான் கேட்கத் தயாராக இருக்கிறேன். உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்” என்று பாசம் பொங்க, தன் உணர்வுகளை வார்த்தைகளில் உதிர்த்தாள் தாரிகா.

இந்தப்பாசம் எதிர்க்காலத்தில் சுயநலமாக மாறித் தன் உடன் பிறந்தவளுக்குத் தீங்குச்செய்யும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்று அப்போது தாரிகாவிற்குத் தெரியவில்லை.

“சரி சரி ரொம்பச் சென்ட்டியாகப் பேசாத… ஏற்கனவே நான் இருக்குற இடத்தில் குளிர் ஜாஸ்தி… இன்னும் எனக்குக் குளிர் வந்து காய்ச்சல் வந்தி விடப்போது… நாளைக்கு எனக்கு வேலைக்குப் போகணும்”… என்று தாரிகாவைக் கேலிச் செய்தாள் தாரா.

“போடி” என்று சலித்துக் கொண்டாள் தாரிகா. அவள் கண்கள் தன் உடன் ஒட்டிப் பிறந்தவளின் அன்பில் கண் நிறைந்தது.

தாரிகாவிடம் பேசிய பின் உறங்கிக் கொண்டிருக்கும் மகனைப் பார்த்தாள் தாரா.

எந்தக் கலங்கமும் இல்லாமல் கவலையில்லாமல் உறங்கும் இந்த மழலை வாழ்க்கை அவ்வளவு அழகாகத் தோன்றியது அவளுக்கு.

எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம்… யாருக்காகவும் யோசிக்க வேண்டாம்… நம்முடைய வழியில் வாழ்க்கையை வாழ்ந்தால் போதும்…‌ வாழ்க்கையில் நிம்மதியை இழக்க வேண்டி இருக்காது.

மெல்ல அவன் அருகில் வந்து படுத்தாள் தாரா. உறக்கம் அவளை வந்து அரவணைத்துக் கொண்டது.

தாராவும் மகனும் உறங்கிய இந்த இரவில்… உறக்கம் இன்றி இருந்தனர் தாரிகா…சதீஷ் மற்றும் அதியமான்.

நாளைய பொழுது என்ன எடுத்து வைத்திருக்கிறது என்று அறியாமல் மனதில் தவிப்புத் தாரிகாவை உறங்க விட வில்லை… இந்த இரவின் இருட்டு, நாளைய விடியலில் கொண்டு வரும் செய்தி அவளை இமையை மூட விடாமல் செய்தது.

மெல்ல இருளை விழுங்கியது கதிரவனின் ஒளி…

வார இறுதி என்பதால் பள்ளியும் விடுமுறை. இந்த இரண்டு நாட்கள் அவளுக்கு மிகவும் சிரமமாக இருந்தது கடத்துவதற்கு.

வேகமாகப் படுக்கையில் இருந்து எழுந்தவள் குளித்து மன அமைதிக்கு அந்த இறைவனை நாடினாள்.

கோயிலைச் சுற்றி வந்தவள் ஒரு நல்ல இடமாகப் பார்த்து அமர்ந்தாள்.

மனம் என்னவோ இன்று அமையின்றித் தவித்தது…

ஏன் இப்படி எல்லாம் தோன்றுகிறது என்று உள்ளுக்குள் பயம்‌ உண்டானது.

இந்த ஒன்றரை வருடம் அவள் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டுச் சென்று விட்டது…

எதுவாக இருந்தாலும் என் பெற்றோரின் அமைதியைக் குலைக்கும் வகையில் இல்லாமல் இருந்தால் போதும் என்பது மட்டுமே அவள் வேண்டுதலாக இருந்தது.

அவள் வேண்டுதலைச் செவி சாய்காமல் இருக்கவென்றே ஆலயத்தில் மணியின் ஓசை ஒங்கி ஒலித்ததில் இறைவனின் காதுகளுக்கு அவள் வேண்டுதலின் ஓசைக் கேட்காமல் போனது.

கொஞ்சம் நேரத்துக்கு அமைதியாகக் கோயில் திண்ணையில் அமர்ந்து இருந்தவள் மனம் ஒரு நிலைக்கு வந்ததும் வீட்டினை நோக்கிப் பயணமானாள்.

உணவு உண்ண அமர்ந்து இருந்த தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள் தாரிகா…

"என்னம்மா, ஏன் இவ்வளவு நேரம் கோயிலுக்குச் சென்று வர‌" என்று கேட்டவர் அவளுக்கு உணவினை எடுத்து ஊட்டி விட்டார். அதில் கண் கலங்கத் தந்தையின் தோளில் சாய்ந்தாள் மகள்.

"ஆமா‌, ஆமா இன்னும் இப்படியே செல்லம் கொஞ்சிட்டு இருங்க... கல்யாணம் வயசு வந்தாச்சு உங்க மகளுகளுக்கு" என்று கழுத்தை வெட்டிய மனைவியின் செயலில் சிரித்தார் கங்காதரன்.

"கல்யாணம் செய்து வேறு வீட்டுக்குச் சென்றாலும், என் பொண்ணுக்கு நான் ஊட்டி விடுவேன்... உனக்கு ஏன் புனிதா, பொறாமை" என்று‌ மனைவியை வம்பிழுத்தார் கங்காதரன்.

"ஆமா‌ம் பொறாமை பட்டுட்டாலும்... இதற்கெல்லாம் வரப்போகும் மருமகன் விட்டு வைக்க வேண்டும்" என்றவர் மகளுக்கும் உணவை‌ப் பரிமாறினார்.

இருவரும் உண்டு முடித்த கங்காதரன் வேலைக்குச் செல்லத் தயாராகும் போது.. மகேந்திரன்.. உள்ளே வந்தான்.

"என்ன மாப்பிள்ளை அதிசயம் தான், வேலைக்குப் போகாமல் மாமாவைப் பார்க்க வந்திருக்காரு" என்று‌ மருமகனைக் கேலிச் செய்தபடியே வாயிலைப் பார்த்தவர்... மகேந்திரன் உடன் வந்த பெண்மணிப் பார்த்து என்ன என்பது போல் மருமகனைக் கேட்டவர்... வீடுத்தேடி வந்த புதியவர்களை "வாங்க" என்று‌ வரவேற்று உள்ளே அழைத்தார்.

வரவேற்பு அறையில் நடக்கும் பேச்சுச் சத்தத்தில் சமையலறை இருந்து ‌புனிதாவும்‌வந்தார்.

புதியவர் பார்த்து "உக்காருங்க" என்று அவரை அமர வைத்துக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் புனிதா..

புதியதாக வீட்டிற்கு வந்தவரை இன்முகமாக வரவேற்பது நம் பண்பாடு அல்லவா.

கங்காதரனின் குழப்பமான முகத்தைப் பார்த்த மகேந்திரன்…
"மாமா நம் தாரிகாவை‌ப் பெண் கேட்டு வந்து இருக்காங்க" என்று வந்த‌‌விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைத்தான்.

"அப்படியா" என்று சொன்னவர் வந்த பெண்மணியிடம் அவர்கள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்க, அவரோடு வந்த அந்த‌ அம்மாவின்‌ உதவியாளன் 'அதியமான் தன் தம்பிக்குப் பெண் கேட்டு அம்மாவை அனுப்பி வைத்திருப்பதாக'க் கூறினான்.

சதீஷின் தாயார் சாந்தி, தன் இளைய மகனுக்குத் தாரிகாவைப் பெண் கேட்டார்.

கங்காதரன் மனதிலோ 'இவர்களுக்கு எப்படித் தன் மகளின் விவரங்கள் கிடைத்தது' என்று‌ச் சிந்தனை ஓடியது. அந்தக் கேள்விக்குப் பதிலாகச் சதீஷிற்கு அவரின் மகளை விருப்பம் என்று‌க் கூறினார்ச் சாந்தி.

"நீங்கள் சொல்வது சரிதான்... பெண்‌ என்றால்‌ வீடு தேடி வந்து பெண் கேட்டு வருவது தானே நாட்டு நடப்பு… உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது... எனக்கு இரண்டும் பெண் பிள்ளைகள்.. அவங்க இரட்டைப் பிறப்பு… அது தான் இரண்டு பேருக்கும் ஒன்றாகத் திருமணம் செய்வது என்று முடிவு செய்து இருக்கேன்"… என்றார்க் கங்காதரன்.

"ம்ம் புரியுது.. உங்க இரண்டு பெண் பிள்ளைகளில் ஒன்றை என் மகனுக்குத் தாங்க" என்று கேட்டார்ச் சாந்தி.

திட்ட மிடாமல் சட்டென இந்தச் சூழ்நிலையில் என்ன செய்ய என்று தினறிப் போனது உண்மையாக இருந்த போதும்.. தன் மகளைப் பிடித்துப் பெண் கேட்பதால் தவிர்க்க மனமும் வரவில்லை கங்காதரனுக்கு .

அதே நேரத்தில் தாராவின் திருமணம் கைக்கூடினால் நன்றாக இருக்கும் என்றவரின் எண்ணம் தவறில்லையே…

தன் மூத்த மகன் திருமணம் வேண்டாம் என்று கூறியது இந்த நேரத்தில் நினைவில் வந்தது சாந்தியம்மாவிற்கு. அதியமானுக்குத் தாரிகாவின் உடன் பிறந்தவளைப் பெண் கேட்டால், தன் தம்பிக்காக அவன் இந்தத் தாரிகாவின் இரட்டைப் சகோதரியைக் கல்யாணம் செய்வதற்குச் சம்மதிப்பான் என்ற எண்ணம் மனதில் தோன்றியதும்... தாமதிக்காமல் அதை அங்கேயே செயல் படுத்தினார்ச் சாந்தி.

"உங்க இன்னொரு பெண்ணை, என் பெரிய பையனுக்குத் தருவிங்களா... இரண்டு பேரும் ஒரே வீட்டில் வாழட்டும்" என்று மற்றொரு அதிர்ச்சியைக் கொடுத்தார் சாந்தி.

இதை விட வேறென்ன வேண்டும் கங்காதரனுக்கு…

வேகமாகப் புனிதா விடம் தாரிகாவை அழைத்து வருமாறு கூறினார்.

புனிதாவோடு சென்ற மகேந்திரன் தாரிகாவை வேகமாக ரெடியாகச் சொன்னான்... கோயிலுக்குச் சென்று வந்ததால் முகமும் அழகாகப் பக்தி மயமாக இருந்தது.... இதே போதும் அத்தை அவளுக்கு என்றான்.

எதுவும் புரியாமல் விழித்த தாரிகாவைப் பார்த்து "உனக்குப் பெண் பார்க்க வந்து இருக்காங்க" என்றதும் கண் கலங்கியது அவளுக்கு… அதை உணர்ந்த மகேந்திரன்... மாப்பிள்ளைப் பெயர்ச் 'சதீஷ்' என்றான்… அவன் எங்கே படித்தான் என்று மட்டுமே கூறினான் எல்லாம் புரிந்தது தாரிகாவிற்கு.

அவள் முகத்தில் பல விதமான உணர்வுகளின் அலைகள் வந்து வந்து சென்றது.

பெண் பார்க்க வந்ததால் தான் இப்படிப் பயத்தோடு இருக்கிறாள் என்று‌ நினைத்துக்‌கொண்டார், புனிதா.

"சீக்கிரம் வாங்க, வந்தவர்கள் காத்திருக்காங்க" என்று அவளை அழைத்து வந்தார் புனிதா அவர்கள் பின்னே வந்தான் மகேந்திரன்.

எல்லாம் நல்ல படியாக முடிய வேண்டும் என்பது மட்டுமே அவன் மனதில் இருந்தது.

தாரிகாவைக் கண்டதும் மனதில் சந்தோஷம் மட்டுமே அமைதியான அழகு அவள் முகத்தில் பிரதிபலித்தது.

சதீஷிற்கு நல்ல பெண் தேர்வு செய்திருக்கும் தன் பெரிய மகன் என்று மனதில் பெருமைப் பிடிபடவில்லை சாந்தியம்மாவிற்கு.

அப்போது இவளின் உடன் பிறந்தவள் இன்னும் அழகாக இருப்பாள் என்று மனதில் தன் பெரிய பையனுக்கு எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும் என்ற சிந்தனையில் கங்காதரனிடம் கேட்டார்.

"உங்கள் இன்னொரு பெண்ணைப் பார்த்து விட்டால் ... இரண்டு பேருக்கும் ஓன்றாகவே எல்லாச் சடங்கும் வைத்து விடாலாம்" என்றார், சாந்தி.

சாந்தியம்மாவைக் கண்டாலே பெரிய இடத்துப் பெண்மணி என்பதில் ஐயமில்லை…
அவரின் வெளிபடையான‌ப் பேச்சு‌‌ம் மனதில் நிம்மதியை உண்டாக்கியது கங்காரதனுக்கு.

புனிதாவோ "அவசரம் வேண்டாமே... பிள்ளைகள் இடமும் கேட்டுட்டு, அப்பறம் முடிவுச் செய்யலாம்" என்றார்…

"இரண்டாவது மகனுக்குச் சம்மதம் தான்" என்றவர் நேரடியாக அவளிடமே கேட்டார் "உனக்கு என் பையனைத் திருமணச் செய்ய விருப்பமா" என்று…

அவள் கேட்ட வேகத்தில் "ம்ம் சம்மதம்" என்று தலையை ஆட்டினாள்…

அவளின் இந்த வேகம் எதனால் என்று சிந்திக்கத் தவறியிருந்தனர் அவள் பெற்றோர்.

தாரிகாவின் சம்மதம் அடுத்தத் தாராவின் பதிலுக்குக் காத்திருக்க வைத்தது.

இன்றைக்குத் தான் நினைத்த காரியங்கள் நடத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் "உங்கள் இன்னொரு பெண்ணைக் கேளுங்கள்" என்றார், சாந்தி.

"அவள் வெளி ஊரில் வேலையில் இருக்கிறாள்" என்று கங்காதரன் பதிலில்,

"அப்போது அலைபேசியில் கேளுங்கள், அவளுக்கு விருப்பமென்றால் எப்போது‌ விடுமுறை கிடைக்குதோ, அப்போது என் மகனை வந்து பெண் பார்க்கச்சொல்லறேன்" என்று அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார் இந்தப் பெண் பார்க்கும் படலத்தை.

அவர் கூறுவதில் இருந்து நியாயம்... தாராவிற்கு அழைத்துக் காத்திருக்க வைத்தது.

தாரிகாவைப் பெண் கேட்டுச் சதீஷின் தாயார் வந்து இருக்கின்றார் என்று மகேந்திரன் முலம் தெரிந்து கொண்ட தாராவிற்கு மனதில் நிம்மதிப் பரவியது…

அந்நேரம் அவள் அலைபேசியின் மணி அடிக்கவும் யாரென்று பார்த்தாள்... தன் தந்தையின் அழைப்பு என்றதும் பெண் பார்க்கும் படலத்தைப் பற்றிக் கூறவதற்குத் தான் அழைக்கிறார் என்று எண்ணி மனதில் சந்தோஷமாக எடுத்துப் பேசினாள் தாரா.


"சொல்லுங்க அப்பா"…

"தாரிகாவைப் பெண் கேட்டு வந்து இருக்காங்கத் தங்கம்…
அவங்களுக்கு அவளை மிகவும் பிடித்த இருக்கு.. அவளுக்கும் தான்"… என்றவர்
வந்தவர்களைப்பற்றிய விவரம் கூறியவர் பின் அமைதியானார்.

"என்ன அப்பா… அதுதான் பிடிச்சு இருக்கிறது சொல்லுறீங்க... அப்புறம் என்ன" என்றாள் தாரா…

"அவங்களோட பெரிய மகனுக்கு உன்னையும் கேட்கிறாங்கள் தங்கம்... அது தான் உன்னோட விருப்பம் கேட்கத்தான் அழைத்தேன்" என்று அவளுக்குப் புரியும் படிச் சொல்லி முடித்தார் கங்காதரன்.

தன் தந்தையின் ஆசையைப் பற்றி நன்கு அறிந்திருந்த தாராவிற்கு... சதீஷின் அன்னையின் விருப்பமும் புரிந்தது. ஆனால் மாப்பிள்ளையாக அங்கே அதியமான் இருப்பது தான் அவளுக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது…
எனவே வேகமாக "இல்லை அப்பா... எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம்… நீங்கள் தாரிகாவிற்கு‌ இந்த இடத்தைப் பேசி முடித்து விடுங்கள்" என்றாள்.

"என்னம்மா, சொல்லற நாம் விசாரிக்க வேண்டாமா" என்ற அவரின் வார்த்தைகள் கேட்டு

"அப்பா மாமா என்னிடம் எல்லாம் சொல்லிட்டாரு…‌ மாப்பிள்ளை வீட்டுச் சைடுக் கொஞ்சம் பெரிய இடம் தான்... அதனால் கண்டிப்பாக நல்ல குடும்பமாகத் தான் இருப்பாங்க"… என்றவளுக்குச் சாந்தியம்மாள் முகம் வந்து சென்றது. அதில் அவர் பெயருக்கு ஏற்றது போல் சாந்தமாகத் தான் இருந்தது.

மகளின் வார்த்தைகள் தந்த நம்பிக்கையில் "நீ சொல்லற … ம்ம் சரி பாப்பா" என்றவர் தன் மனைவியிடம் மகளின் விருப்பம் கூறினார்.

புனிதாவும் அவளின் கருத்துக்கு மதிப்பளித்துத் தாரிகாவின் திருமணம் சம்மதம் தந்தனர்.

சாந்தியம்மாவைப் பார்த்து..." மன்னிக்கனும்... எங்கள் தாராவிற்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று சொல்லறாள்... நீங்க தவறாக நினைக்க வேண்டாம் இந்தக்காலத்துப் பிள்ளைகளுக்கு மனதில் பல விருப்பங்கள் இருக்கும்... உங்களுக்கு விரும்பம் என்றால் தாரிகா மற்றும் உங்கள் இரண்டாவது பையன் திருமணத்தைப் பேசி முடிக்கலாம்" என்று பணிவாகக் கூறி முடித்தார் கங்காதரன்.

இரண்டு கல்யாணமும் ஒன்றாக நடக்கவேண்டும் என்றது அவர் தானே... தாராவின் பதிலைக்கேட்டதும் இப்போது தவறாகப்பட்டது அவருக்கு.

தன் தவறால் தாரிகாவின் வாழ்க்கைப் பாதிக்கப் படக் கூடாது என்று தெளிவாக இருந்தார் கங்காதரன்.

"புரியுது, தம்பி... யாருக்கு யார் என்று முடிவு எல்லாம் ஆண்டவன் கையில்தான்... நாம முடிவுசெய்வதால் எல்லாம் திருமணம் நடப்பதில்லை... அவர்கள் சோடி இறைவனால் பிணைக்கப்பட்டதால் தான்" என்று கங்காதரனுக்கு ஆறுதல் கூறினாலும் சாந்தியம்மாவின் உள் மனதில் தன் பெரிய மகனை வேண்டாம் என்ற தாராவின் மேல் மெல்லிய வெறுப்புக் கீறலாக விழுந்தது ...

" சரி அதை விடுங்க... அடுத்த வாரம் என் சின்னப் பையனைப் பெண் பார்க்க வரச் சொல்கிறேன், நல்ல நாள் நேரம் நீங்கள் சொல்லி அனுப்புங்கள்" என்றவர் விடைப் பெற்றார்…
அவர் தாரிகா வீட்டில் இருந்து வெளியே வந்து தங்கள் காரில் ஏறி அமர்ந்ததும் அவர் அலைப்பேசிக்கு அதியமானிடம் இருந்து அழைப்பு வந்தது.

அதை எடுத்துப் பேசியவர் "எல்லாம் நல்ல விதமாகப் பேசி‌ முடிச்சாச்சுத் தம்பி, ஆனால் ஒரு குட்டி வருத்தம் தான்" என்றார் இயல்பாக…

"என்னம்மா வருத்தம், உங்களுக்குப் பெண்னைப் பிடிக்கவில்லையா?" என்றான் அதியமான்.

"ச்ச ச்ச நல்ல பொண்ணுத் தம்பி.. தங்கச் சிலைப் போல இருக்கா... குறைச் சொல்ல எதுவும் இல்லை" என்றார்…

"அப்போது என்ன தான் அம்மா வருத்தம்" என்றான் சிறிதுக் கடுமையாக…

"நீ ஏன் கோபம் படற, சரி நான் சொல்ல வில்லை" என்று அழைப்பைத் துண்டிக்கப் போனார்.


"சரி சரி நான் கோபமெல்லாம் படவில்லை அம்மா உங்களுக்கு வருத்தம் என்றுதும்‌… உங்களுக்கு நான் எடுத்த முடிவுப் பிடிக்கவில்லையா என்று நினைத்தேன்" என்று அவரைத் திசைத் திருப்பினான்…

"நீ எப்பவும் சரியாகத் தான் முடிவு செய்கிறாய்... நான் தான் தவறாக முடிவு செய்துள்ளேன்" என்றார், சாந்தி…

"என்னைக் குழப்பாமல், நேரடியாக விஷயத்துக்கு வாங்க" என்றான் அதியமான்.


"இல்லை தம்பி... அவங்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள்... அதில் ஒருத்தித் தான் தாரிகா… இன்னொரு பெண்ணை நான் உனக்குக் கேட்டேன்... அந்தப் பொண்ணுக்கு உன்னைக் கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டாள்... அது தான் வருத்தம் ஆகிடுச்சு" என்றார்.

திருமணம் செய்ய விருப்பமில்லை என்ற அவள் வார்த்தைகளை... உன்னைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்று அவர் கூறியதில் அதியமானுக்கு ஈகோ பலமாகத் தாக்கியது.

தன்னை ஒருத்தி வேண்டாம் என்று கூறி விட்டாளா என்று மனதில் அவமானமாக உணர்ந்தான் அதியமான்.

தன்னை வேண்டாம் என்று சொல்லும் அவள் யார் அந்த உலக அழகி என்று மனதில் நினைத்தவன் தாரிகாவின் உடன் பிறந்தவள் யாரென விசாரிக்கச் சொன்னான் தன் பி ஏ விடம்.

அதியமான் மீண்டும் தாராவின் வாழ்க்கையில் என்ன திருப்பங்களைக் கொண்டு வருவான்…

தொடரும்…
 
Top