அத்தியாயம் 14
'அப்படி யாரும் தனக்கு இல்லை' என்று உணர்ந்து, குறிப்பெடுப்பதைத் தொடர்ந்தாள் முக்தா.
"அம்மா! அவங்களுக்கு அடுத்ததைச் சொல்லுங்க. ஒரே விஷயத்திலேயே இருக்கீங்களே!" என்றாள் மௌனா.
அதன் பின்னர், இருந்த சடங்குகளை அவர் சொல்லச் சொல்லப் பட்டியலிட்டு முடித்து,
"எல்லாமே லிஸ்ட் எடுத்தாச்சும்மா" என்று மலர்ச்சியுடன் கூறினாள்.
"இப்போ ஓகேயா?" என அவளது கையிலிருந்த வெள்ளைத் தாளையும், பேனாவையும் வாங்கி ஓரத்தில் வைத்து விட்டாள் மௌனா.
அவர்களுக்கு நன்றி தெரிவித்தாள் முக்தா.
மஹதன் மற்றும் மௌனாவின் நிச்சயத்திற்கு, எவ்வளவு கூட்டம் வந்தாலும், தாராளமாகத் தாங்கும் அளவிற்கான, எல்லா இடங்களிலும் ஏஸி பொருத்தியிருந்த, விசாலமான கூடத்தைத் தான் புக் செய்திருந்தனர்.
அந்தச் செலவுகள் யாவற்றையும் தங்கள் பொறுப்பில் தான் விட வேண்டும் என்று உறுதியாக கூறி விட்டனர் சிவமணியும், அன்னபூரணியும்.
திருமூர்த்தி மற்றும் மஹதனின் அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரையும் நிச்சயத்தார்த்தத்திற்கு வரவேற்று இருந்தனர்.
அதே போல, முக்கியஸ்தர்கள் எல்லாரையும் அழைத்திருந்தனர் அக்குடும்பத்தினர்.
மௌனாவுடைய பெற்றோரின் சொந்தங்கள் சிலர், தாங்களாகவே முன் வந்து அவளுடைய நிச்சயத்தைப் பார்க்க வந்திருந்தனர்.
அதிகாலையிலேயே தங்கள் மகனுடன் வந்திருந்தனர் சித்ரலேகாவும், காஞ்சியப்பனும்.
அவர்களுக்கு முன்னதாக ஆங்கே விஜயம் செய்திருந்தார் நீலகண்டன்.
"ஹாய் அங்கிள்" என அவரையும் வரவேற்று, தன் தாய், தந்தையுடன் உட்கார வைத்து விட்டு,"மஹதனோட ரூமுக்குப் போறேன்" என்றான்.
"மாப்பிள்ளை! என் பொண்ணு,
மௌனாவோட ரூமுக்குப் போய், ரொம்ப நேரமாச்சு. அவளை இவங்கப் பாக்கனும்ல? சோ, நான் வர சொன்னேன்னு கூப்பிட்டு வாங்க"என்று கூறினார் நீலகண்டன்.
"ஓகே அங்கிள்" என மஹதனுடைய அறைக்கு விரைந்தான் கிஷான்.
சமூகத்தில் முக்கியத் தொழிலதிபரின் மகனுடைய நிச்சயத்தார்த்தம் எனும் போது, அவர்களுடன் தோழமை பாராட்டுபவர்கள் மட்டுமில்லாமல், போட்டியாளர்களும் கூட மண்டபத்திற்கு வருகை புரிந்திருந்தனர்.
பார்வைக்குத் தெரிந்த, தெரியாத இடங்களில் எல்லாம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருந்தார்கள்.
மஹதனுடைய மெய்க்காப்பாளன் அவற்றில் இருந்து கண்களை விலக்காமல், கண்காணித்துக் கொண்டிருந்தான்.
"நண்பா" என்ற குரலுடன் மஹதனுடைய அறைக்குள் நுழைந்தான் கிஷான்.
"வாடா.." என்று அவனை அழைத்து,
"செக்யூரிட்டி செக்கிங் முடிஞ்சுதாடா?" என்றான்.
"கம்ப்ளீட் செக் பண்ணிட்டேன் டா. எல்லாம் நம்ம கன்ட்ரோலில் தான் இருக்கு"
"அப்போ சரி" எனத் தான், தாயாராகி விட்டதைப் பெற்றோரிடம் கால் செய்து தெரிவித்தான் மஹதன்.
"நான் முக்தாவைப் பார்க்கப் போறேன்" என்று நண்பனின் அறையிலிருந்து ஜூட் விட்டான்.
அப்போது தான் மௌனாவிற்கும் அலங்காரங்கள் முடிந்திருந்தது.
அதனால் அவளது அறையை விட்டு வெளியேற ஆயத்தமானாள் முக்தா.
கிஷான் தனது செல்பேசிக்கு அழைக்கவும்,
"மேக்கப் முடிஞ்சதுங்க. நான் அப்பாவைப் பார்க்க ஹாலுக்குத் தான் வந்துட்டு இருக்கேன்" என்றாள்.
"அவரும், என் அப்பா, அம்மாவும் சேர்ந்து தான் உட்கார்ந்து இருக்காங்க. உன்னை அழைச்சுட்டு வர சொல்லி மாமா என்னை அனுப்பினார்"
சிறு கால இடைவெளிக்குப் பிறகு, இவனைப் பார்த்ததும், அருகே வந்தாள்.
"மாமா உன்னைத் தேடுறாங்க முகி. என் பேரன்ட்ஸ் வந்துட்டாங்க" என்றதும்,
தந்தையின் அழைப்பு எதற்காக என்பதை உணர்ந்து,"ஓஹ்…! ஷ்யூர் கிஷான்" என்று அவனுடன் வேகமாக நடை போட்டாள் முக்தா.
"வெல்கம் ட்ரிங்க் கொடுத்தாங்களாடா?" என்று நீலகண்டனிடம் கேட்டார் திருமூர்த்தி.
"எல்லாம் வந்துடுச்சு. நாங்களும் ஜுஸ் குடிச்சிட்டுத் தான் பேசிக்கிட்டு இருந்தோம்" எனவும்,
"அரேன்ட்ஜ்மெண்ட்ஸ் எல்லாம் மௌனாவோட அப்பா,அம்மா தான் பண்ணியிருக்காங்க" என்று பெருமையுடன் கூறினார் திருமூர்த்தி.
"அப்படியா? கிளாஸ்ஸியா (classy- உயர்தரமான, நடை நயம் மிக்க, நாகரிகப் பாணியும் கொண்ட) இருக்கு!" என்று புகழ்ந்தார் காஞ்சியப்பன்.
"ஆமாம். செலவு பத்தி நீங்க எதுவும் கண்டிஷன் போடலையா?" என்றார் சித்ரலேகா.
"இல்ல ம்மா. ஏற்கனவே மஹத் பெண்ணோட டிரெஸ், ஜூவல்ஸ்ன்னு எதிலும் அவங்களைத் தலையிட விடலை. அந்த ஆற்றாமை அவங்களுக்கு இருக்கு. அதனால், நிச்சயத்தார்த்த ஏற்பாடுகளில் எதுவும் சொல்லக் கூடாதுன்னு ஒப்பந்தம் போட்டுட்டாங்க" என்று விவரித்தார் திருமூர்த்தி.
அப்போது, கிஷானுடன், முக்தாவும் வந்து விடவே.
மருமகளைக் கண்டதும், "முகி! இயர்லி மார்னிங் வந்துட்டியா? பொண்ணு அலங்காரம் முடிஞ்சிதா?" என்று விசாரித்தார் சித்ரலேகா.
"ஆங்! முடிஞ்சு தான் நான் வந்துட்டு இருந்தேன் அத்தை. அப்போ இவரோட ஃபோன் காலும் வர, அப்படியே இங்கே வந்தாச்சு" என்று மொழிந்தாள் முக்தா.
"மஹதன் ரெடி ஆகிட்டானா கிஷான்?" என்று தன் மகனைப் பற்றி அவனிடம் விசாரித்தார் திருமூர்த்தி.
"அவனும் தயார் ப்பா"
அப்படியென்றால் உடனே கணையாழிகளை மாற்றிக் கொள்ளும்
வைபவத்தை ஆரம்பிக்க வேண்டுமே! என்று தன் சம்பந்தியிடம் கூறினார் திருமூர்த்தி.
சிவமணி,"இதோ சொல்றேன் சம்பந்தி" என்று தன் மனையாளைத் தேடிப் போனார்.
அவரது துணைவி, கௌசல்யாவுடன் அமர்ந்திருப்பதைப் பார்க்கவும்,
"பூரணி! மாப்பிள்ளையும், பொண்ணும் ரெடி. மோதிரத்தைப் போட்ற சடங்கை நடத்திடலாமா?" என்றார் சிவமணி.
"சரிங்க. வாங்க சம்பந்தி" எனக் கௌசல்யாவையும் அழைத்துப் போனார்கள்.
"கௌசி! மோதிரங்கள் உங்கிட்ட தான் இருக்கு. எடுத்துட்டு வா சீக்கிரம்!" என்று மனைவியிடம் கூறிவிட்டு, மஹதனைப் பார்க்கச் சென்றார் திருமூர்த்தி.
அன்னபூரணியும், தனது மகளைப் பாராத்து வரப் போனார்.
"அகிம்மா! மோதிரம் போட்ற நேரம் வந்தாச்சு.கூப்பிட்றப்போ, இவளை மேடைக்கு அழைச்சிட்டு வா"என்று அறிவுறுத்தினார்.
"முகி! என் கூட வா" எனத் தன் கைப்பையை எடுத்துக் கொண்ட கௌசல்யா, அவளையும் உடன் அழைத்துச் சென்றார்.
ஏனென்று கேட்காமல் அவரைப் பின்பற்றினாள் முக்தா.
"நீ தான் இந்த எங்கேட்ஜ்மெண்ட் ரிங்ஸை, மேடையில் வச்சு, அவங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கனும்" என்று உரிமையாக அவளுக்கு உத்தரவிட்டார் கௌசல்யா.
மஹதனைத் தான் விரும்பியதைச் சபையில் இருந்தவர்கள் அத்தனைப் பேருக்கும் தெரியும். அப்படியிருக்க, இதைச் செய்தால், அவர்கள் மத்தியில் இருந்து, கண்டிப்பாக ஏதாவது பேச்சு வரும்.அதையெல்லாம் தெரிந்தும் கூடவா, இவர் தன்னிடம் இவ்வாறு சொல்கிறார்! என்று திடுக்கிட்டது அவளுக்கு.
"என்ன முழிச்சுப் பாக்குற? நீ தான மணப்பெண் தோழி? அப்போ நீ தான் கொடுக்கனும்" என்று புன்னகை செய்தார் கௌசல்யா.
மணப்பெண் தோழி என்றால் மௌனாவுடன் மட்டும் இருந்தால் போதும், மஹதனின் பக்கமே செல்லத் தேவையிராது என்று தான் எண்ணினாள் முக்தா. ஆனால், இருவருக்குமான மோதிரத்தைத் தான் கொடுக்க வேண்டும் என்று விழைகிறார் கௌசல்யா. இது எதற்காக? என யோசித்தபடி அவள் தயங்கவும்,
"நீ யோசிக்கிறது எதுக்காகன்னுப் புரியுது முகி. அவங்களோட எண்ணத்தை மாற்றத் தான், இப்படி சொல்றேன்" என்க,
அவரைக் குழப்பமாக ஏறிட்டாள் முக்தா.
"மஹதனோட மனசில் நீயும் இல்லை, உன் மனசில் அவனும் இல்லை. ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டீங்க. உன்னோட கையால் அவங்களுக்கு இதைச் செய்தால், அவங்களோட தவறான அபிப்ராயம் மாறிடும். மத்தவங்களைப் பத்திக் கவலை எதுக்குன்னுத் தோனும். உன்னைப் பத்திக் கேவலமாகப் பேசினவங்களுக்குக் கொஞ்சமாகப் பதிலடி கொடுத்தால் உனக்கும் நிம்மதியாக இருக்குமே! அதான்,
அது மட்டுமில்லாமல், உனக்குக் கிஷான் கிடைச்சதையும் எல்லாருக்கும் தெரியப்படுத்தனும். அது என் மகனோட நிச்சயத்தில் நடக்கனும்னு நான் ஆசைப்பட்றேன்டா ம்மா!" என்று விவரமாக கூறினார் கௌசல்யா.
அவருடைய நிதானமானப் பேச்சைக் கேட்டு, அவளுக்கும் அதே தான் தோன்றிற்று.
இத்தனைக் கோடி மக்கள் பார்க்கும் நேரலையில், அவதூறுப் பேச்சுக்களைக் கேட்டுக் கண்ணீர் வடித்த தனக்கு நியாயம் கிட்டப் போகிறது அல்லது குறைந்தது நிம்மதியாவது கிடைக்கப் போகிறது என்று அவரது விழிகளைச் சந்தித்தவள்,
"சரிங்க ஆன்ட்டி" எனக் கௌசல்யாவிடம் இருந்து, கணையாழிகளைக் கைப்பற்றினாள் முக்தா.
"நண்பா! மௌனாகிட்டப் பேசிட்டு வர்றேன்" என்று செல்பேசியுடன் சற்று விலகிச் சென்றான் மஹதன்.
அப்போது, "மோதிரங்களைக் கொண்டு வந்துட்டாங்க. அவன் எங்கே கிஷான்?" என்று கேட்டார் திருமூர்த்தி.
"பொண்ணுக் கூட ஃபோன் பேசப் போயிருக்கான் ப்பா" என்றான்.
"அழிச்சாட்டியம் பண்றான்" எனச் சலித்துக் கொண்டு மனைவியைத் தேடிக் கிளம்பினார்.
"மஹத்! நிச்சயம் நடக்கிற நேரத்தில் இதென்னது?" என்று பதட்டமானாள் அவனது காதலி.
"மௌனா! நீ பதட்டமாக இருப்பன்னுத் தெரியும். ஏதாவது பேசி கூல் பண்ணி, மேடைக்கு வர வைப்போம்னு பார்த்தால், இன்னும் நர்வஸ் ஆகுறியே!" என்று குறுஞ்சிரிப்புடன் கூறினான் மஹதன்.
"தானாகவே பதட்டம் வந்துடுது ங்க" என்று பெருமூச்சு விட்டாள்.
"அதைத் தடுத்து நிறுத்துறா மாதிரி எதாவது சொல்லவா?" என்று விஷமத்துடன் வினவினான்.
"சொல்லுங்க ப்ளீஸ்!" என அவள் ஊக்குவிக்கவும்,
"ஐ லவ் யூ மௌனா! இந்தப் பதட்டத்தில் என்னைக் காதலோட பார்க்கிறதை மறந்துடாதம்மா ப்ளீஸ்! இன்னும் நீ எனக்குப் புரபோஸ் கூட செய்யலை" என்றான் மஹதன்.
அவன் காதலைச் சொன்னதிலேயே பதட்டம் குறைந்து, மௌனாவின் விழிகளில் வெட்கம் துளிர்த்தது.
"நான் புரபோஸ் பண்ணுவேன்! ஆனால் இப்போ இல்லைங்க!" என்று அதே வரியை அட்சுப் பிசகாமல் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் மௌனா.
தன்னவளுடைய பதட்டத்தைத் தணித்தவனுக்கும், உற்சாகமும், ஆரவாரமும் அதைவிட, காதலும், ஆசையும் பெருகிற்று.
இங்கோ,"மஹதனோட மோதிரத்தை எங்கிட்ட கொடு முகி?" என்று தன் கரத்தை அவள் புறம் நீட்டினான் கிஷான்.
"அது…" என்று தயங்கி நின்றாள் முக்தா.
"என்னம்மா?" என்று கனிவுடன் கேட்டான்.
"நான் தான் இரண்டு பேருக்கும் இதைக் கொடுக்கனும்னு கௌசல்யா ஆன்ட்டி கேட்டுக்கிட்டாங்க கிஷான்" என்றாள்.
"அப்போ நீயே கொடு. இதுக்கு ஏன் தடுமாறுற!" என்றவாறு அவளைச் சமாதானப்படுத்தினான் கிஷான்.
"அதுக்கு அவங்க சொன்னக் காரணம்?" என்று முழுவதும் சொல்லி முடித்தாள் முக்தா.
"கௌசல்யா ம்மா சரியாகத் தான் டிஸைட் செய்திருக்காங்க. வா" என மேடைக்குக் கீழே அழைத்துச் சென்று இவ்விஷயத்தை மற்றவர்களிடமும் போட்டுடைத்தான் கிஷான்.
"அவங்களுக்கு உண்மையிலேயே நல்ல மனசு" எனத் தன் மகளிடம் சொன்னார் நீலகண்டன்.
"இன்னும் மஹதனும்,மௌனாவும் ஃபோன் பேசிக்கிட்டு இருக்கிறாங்க" என்றார் திருமூர்த்தி.
"இந்நேரம் பேசி முடிச்சிருப்பாங்க அப்பா" என்றான் கிஷான்.
"அதோ அகதா வர்றாங்க" என்று கூறினாள் முக்தா.
"மௌனாவை மேடைக்குக் கூப்பிட்டு வா அகிம்மா. நீயும் கூட போ முகி" என்றார் அன்னபூரணி.
"நீ உன் நண்பனை அழைச்சிட்டு வா" என்று கிஷானிடம் சொன்னார் காஞ்சியப்பன்.
அங்கு குழுமியிருந்தவர்கள் எல்லாரும் மேடையைப் பார்க்க ஆரம்பத்தனர்.
உயர்தர வகையிலான கோட்,சூட் அணிந்து, ஸ்டைலாக நடந்து வந்தான் மஹதன். அவனுக்கு நேரெதிராக இருந்தப் படிகளில், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், அவளுக்கென்றே கச்சிதமாக வடிவமைத்திருந்த உடையை உடுத்தி இருந்த மௌனா, தன் மென் பாதங்களை வைத்து ஏறி வந்தாள்.
காதல் பார்வையால் தாக்கியவாறு வந்த மௌனாவின் கண்களில், சிறு பதட்டமும் இல்லாதது கண்டு, நிம்மதியுற்றான் மஹதன்.
அவன் நினைத்ததை நடத்திக் காட்டி விட்டான் அல்லவா!
மைக்கை வாங்கி,"ஹலோ! லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்! என்னோட ஒரே சன் மஹதனுக்கும், சிவமணி அண்ட் அன்னபூரணியோட டாட்டர் மௌனாவுக்கும் நடக்கப் போற இந்த எங்கேட்ஜ்மெண்ட்டுக்கு வந்திருக்கிற உங்களை மனமார வரவேற்கிறேன்" என்று தன் குரலை உயர்த்திப் பேசினார் திருமூர்த்தி.
அதை ஏற்றுக் கொண்டதற்கு சாட்சியாகப் பலத்தக் கரகோஷம் எழுந்தது.
மௌனாவின் பெற்றோரான சிவமணிக்கும், அன்னபூரணிக்கும் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இவ்வளவு கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயிருந்தனர்.
அவர்களிடம் மெதுவாக,"உங்களோட பொண்ணும் இதே நிலையில் தான் இருப்பா. உங்கப் பதட்டத்தை வெளியே காட்டிக்காதீங்க, நிமிர்ந்து நில்லுங்க" என்று உரைத்தாள் அகதா.
அதைக் கேட்டுத் தானும் திரும்பி, அவர்களைப் பார்த்து, தைரியம் கொள்ளுமாறு புன்னகைத்தாள் மௌனா.
"இப்போ மோதிரத்தை மாத்திக்கப் போறாங்க" என்று திருமூர்த்தி அறிவிக்கவும்,
கௌசல்யா தந்தவற்றை விரிந்த சிரிப்புடன் மஹதன் மற்றும் மௌனாவின் கரங்களில் அளித்தாள் முக்தா.
அந்தக் காட்சியைப் பார்த்ததும், கீழிருந்த ஒரே ஒரு சிலர் தங்களுக்குள் பேசிக் கொள்ள, அதைக் கடந்து செல்லும் வண்ணம், மௌனாவின் தோளைப் பற்றி, அவளை முன்னேறிச் செல்ல உந்தினாள்.
"நண்பா! போ" என்று வாழ்த்தியவாறு மஹதனை அனுப்பினான் கிஷான்.
கணையாழிகளைக் கையில் வாங்கி, ஒருவருக்கொருவர் மற்றவருடைய மோதிர விரல்களில் அணிவித்து மகிழ்ந்தனர் மணமக்கள்.
"லவ் யூ மஹத்" என்று அவன் தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்காத குறையாக கேட்டுப் பார்த்தும், சொல்லாமல் வக்கனைக் காண்பித்துக் கொண்டிருந்த மௌனாவோ, இன்று இப்படியான ஒரு சூழலில், மொழிந்திருக்க, திகைப்படைந்து நின்று விட்டான் மஹதன்.
அவள் தன்னவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக கூறியிருந்ததால், மேடையில் நின்றிருந்தவர்களும், கீழே அமர்ந்திருந்தவர்களும் மணமக்களுடைய அலாதி அமைதியின் காரணம் என்னவோ? என்று தங்களது பார்வையைக் கூர்மையாக்கினர்.
"டேய்! என்னடா ஃப்ரீஸ் ஆகி நிக்கிற? மௌனா என்ன சொன்னாங்க?" என்று நண்பனின் தோளைத் தட்டினான் கிஷான்.
மௌனாவின் கன்னம் ஏன் இவ்வளவு சிவந்துள்ளது? முகத்தில் போட்ட அலங்காரத்தில் ஏதாவது சேராமல் போய் விட்டதா அவளுக்கு? என்று அவளை ஆராய்ந்தவள்,
"முகத்தில் போட்டிருக்கிற மேக்கப் ஸ்கின்னுக்கு ஒத்துக்கலையா?" என்று மணப்பெண்ணிடம் வினவினாள் முக்தா.
"அச்சோ! இல்லைங்க" என்று அவளது காதில் ஓதினாள் மௌனா.
அதன்பின் தான் முற்றிலும் புரிந்தது அவளுக்கும், அகதாவிற்கும்.
அவளைச் சீண்டுவதற்காக சிரித்து வைத்தவள், கிஷானிடம் உண்மையை உரைத்து விட்டாள் முக்தா.
கீழிருப்பவர்களுடைய முணுமுணுப்பு அதிகமாகி விடவும்,
"கைஸ்! ஒன்னும் இல்லை. கொஞ்சம் அதிகமாக எக்ஸைட் ஆகிட்டாங்க. அவ்ளோ தான்" என்று பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான் கிஷான்.
தன் பெண்ணின் வதனமும், மாப்பிள்ளையுடைய குறுஞ்சிரிப்பும், பெற்றோருக்கு நடந்ததைச் சொல்லாமலேயே உணர்த்தியது.
"ஸ்டேஜையே இரண்டு பண்ணிட்டு இருக்காங்க!" என்று சிரித்தார் சித்ரலேகா.
"ஆமாம் லேகா. மஹதனைப் பார்த்தால் வெட்கப்படுறா மாதிரி தெரியுது" என்றார் அவரது கணவர்.
"மௌனா ஏதாவது சொல்லி இருப்பா. அதான் ரியாக்ட் செய்திருக்கான் போல!" என்று விஷயத்தைக் கணித்து விட்டார் நீலகண்டன்.
"கொஞ்ச நேரத்தில் களேபரம் பண்ணிட்டீங்க" எனச் செல்லமாக இருவரையும் கடிந்து கொண்டார்கள் அவர்களுடைய பெற்றோர்கள்.
அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் சமர்த்தாக அமர வைக்கப்பட்டு, சபையினரைப் பார்த்துக் கை கூப்பி வணங்கினர் மணமக்கள்.
"இப்படியா பண்ணுவ?" என்று மௌனாவின் காதில் கிசுகிசுத்தான் மஹதன்.
"நானும் அதிரடியாக இதைச் செய்யனும்னு யோசிச்சிட்டு இருந்தேன். இப்போ திருப்தியாக இருக்குங்க" என்று கண் சிமிட்டினாள்.
"இப்பவும் முணுமுணுத்துப் பேசாமல் சபையில் இருக்கிறவங்களைப் பார்த்து நேராக உட்காருங்க" என்று அறிவுரை வழங்கினார் அன்னபூரணி.
முக்கியப் புள்ளிகள் தவறாமல் வந்திருந்ததால், அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவே பாதி நாள் போயிற்று.
குடும்பத்துடன் ஓரிரண்டு புகைப்படங்கள் தான் எடுக்க முடிந்தது.
ஆனால், மேலே சுற்றிக் கொண்டிருந்த ட்ரோன் கேமராக்கள் நிச்சயத்தார்த்த நிகழ்வுகளை முழுவதுமாகப் படமெடுத்து தள்ளி இருக்க அவற்றையும் கண்காணித்துக் கொண்டு இருந்தனர் மெய்க்காப்பாளர்கள்.
சாப்பாட்டிற்கு பஃபே முறையை வைத்திருந்ததால், அனைவரும் தங்களுக்கான உணவுகளைத் தட்டில் எடுத்துக் கொண்டு, ருசித்து உண்டனர்.
மௌனாவும் , மஹதனும் உணவுண்ண, கிஷானுடன் பேசிக் கொண்டே உண்டு கொண்டிருந்தாள் முக்தா.
- தொடரும்