“அம்மா என்னோட ஃப்ரெண்ட் ஜெகன் வரேன்னு சொல்லிருக்கான். வந்தா மேல வர சொல்லுங்கம்மா” என தகவலாக சொல்லிவிட்டு மாடியேறினான், தேவா.
மாடியில் அவனுக்கென்று ஓர் அலுவலக அறை இருந்தது. அங்கு தான் தேவா சென்றான். தேவா சொன்னதுபோல் அவனின் நண்பன் அவனுடைய இரண்டு வயது மகன் மற்றும் மனைவியுடன் வந்திருந்தான்.
அவர்களை வரவேற்றவன்,
“முதல்ல உன்னோட மொத்த வருமானமும் மொத்த கடன் தொகையையும் எழுது” என்று ஜெகனிடம் சொன்னான்.
தத்தி தத்தி நடைபயிலும் பத்து மாத குழந்தையான வான்மதியை அழைத்துக்கொண்டு அவர்களுக்கான தேநீருடன் சாருமதியும் மேலே வந்தாள்.
வந்தவர்கள் இருவருக்கும் காஃபியும் குழந்தைக்கு பாலும் கொடுத்தவள் வான்மதியுடன் வெளியேறி அங்கு மாடியில அன்னையும் மகளும் விளையாட சென்றுவிட்டனர்.
ஜெகனும் தேவா சொன்ன மாதிரி அனைத்தையும் எழுதிவிட்டு அவனிடம் நீட்டினான். அதை முழுவதும் ஐந்து நிமிடம் அலசிய தேவா அவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினான்.
அனைத்தையும் சொல்லிய தேவா, “மறக்காம மாசம் ஐயாயிரம் தனியா எமெர்ஜென்சின்னு எடுத்து வைக்கணும். குழந்தை இருக்க வீடு எப்பனாலும் தேவை படும்” என்றான் கண்டிப்புடன்.
“ரொம்ப தேங்க்ஸ் தேவா. ஃபீஸ் எவ்வளவு?” என்றவனை முறைத்த தேவா, “முதல்ல உன்னோட கடனை எல்லாத்தையும் அடைச்சி முடி. அப்புறம் ஃபீஸ் வாங்கிக்கிறேன்” என அனுப்பி வைத்தான்.
“யார் தேவ்?” என்ற சாருமதியின் கேள்விக்கு,
“என்கூட ஸ்கூல் படிச்சவன் மதி. லவ் பண்ணி வீட்ல ஒத்துக்கலனு வீட்டைவிட்டு வெளியேறி கல்யாணம் பண்ணி, குழந்தை பிறந்து இப்ப அவனுக்கு ஏகப்பட்ட லோன் இருக்கு. அதை அடைக்க தான் ஆலோசனை கேட்டான்” என்றவன் மகளை தூக்கிக்கொண்டான்.
“இது நல்லாருக்கே தேவ்? இவ்வளவு நாள் நிறுவனத்துக்கு மட்டும் தான நிதி ஆலோசனை கொடுத்திட்டு இருந்தீங்க? இனிமே பர்சனல் பைனான்ஸ்கும் ஆலோசனை கொடுங்களேன்?” என்றாள்.
“நிதி ஆலோசகருக்கே ஆலோசனையா?” என மிதப்பாக புருவத்தை உயர்த்தினான்.
“என்ன பண்ணுறது நிதி ஆலோசகருக்கும் சில சமயம் மதி ஆலோசனை தேவைப்படுதே!” கண்ணடித்து நமட்டு சிரிப்புடன் சாரு சொன்னாள்.
“பாருடா ரைமிங்கா பேசுற..” என்ற தேவாவின் பதிலில் அவனுக்கு இன்னும் விளங்கவில்லை என்றுணர்ந்தவள்,
“தேவ்! இப்ப நான் மதின்னு சொன்னது என்னை இல்ல..” என்றிழுத்தவள் “புத்திமதி!” என்று சொல்லி மாடியில் இருந்து இறங்கி அறைக்குள் ஓடிவிட்டாள்.
அவளை முறைத்தபடி பின்னே வந்தவன், “இவன் என்னோட நண்பன் மதி. சோ, நான் சொன்னதை கேட்டுப்பான். எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்களே? அதும் நிறுவனம்னா ப்ராபரா டாக்குமெண்ட் போட்டு வேலை நடக்கும். எதுக்கு தெரிஞ்சே வம்புல மாட்டனும்?” என்று நிதர்சனத்தை கூறினான்.
“ஓ.. ஓகே” என்று அதோடு அந்த பேச்சை நிறுத்திக்கொண்டாள்.
பிரசவத்திற்கு பின் வந்த மனஅழுத்தம், சேனல் ஹேக் ஆகியதில் வந்த ஸ்ட்ரெஸ் என்று அனைத்திற்கும் சேர்த்து தேவாவை படுத்தி எடுத்திருந்தாள் சாருமதி. பின் தேவா எவ்வளவு தடுத்தும் அவளின் மனநலன் குறித்து மருத்துவரை பார்த்தாள்.
“நீங்க நல்லாயிருக்கீங்க சாருமதி! எல்லாருக்கும் வரது தான். உங்களுக்கு தெரியாதது இல்லை, யோகா செய்யுங்க மனசை லேசா வெச்சிக்கோங்க. அதிகமா யோசிக்காதீங்க” என்று அறிவுரை வழங்கினார்.
மருத்துவர் சொன்னதை கடைபிடித்த சாருமதி இப்பொழுது தான் நன்றாக தெளிந்திருந்தாள்.
நான்கு மாதங்கள் கடந்த நிலையில் ஒருநாள் காலையில், “தேவ்! தேவ்!” என வான்மதியின் தூக்கம் கலையாத வண்ணம் மெல்லிய குரலில் அழைத்து பலமாக தேவாவை உலுக்கி எழுப்பிக்கொண்டிருந்தாள் சாருமதி.
“என்னடி வேணும்? நைட் உன்னோட பொண்ணு தூங்க விட மாட்றா? காலைல நீ..” என புலம்ப ஆரம்பித்தவனின் கையில் அவள் வைத்ததை பார்த்தவன் அதிர்ச்சியில் கண்கள் விரிய வாயை மூடிக்கொண்டான்.
கர்ப்பத்தை உறுதி படுத்தும் சாதனம் தான் அது! மீண்டும் அதில் இரண்டு கொடு இருந்தது. அவனை முறைத்துக் கொண்டிருந்தவளையும் அந்த சாதனத்தையும் மாறி மாறி பார்த்தவன்,
“ஒரு வயசுல பொண்ணு இருக்கா? எப்படின்னு கேட்குறீங்க?” என சிரிப்பை மறைத்து அவனை முறைத்தாள்.
“ச்ச ச்ச அந்த மீனிங்ல கேட்கலை டி” என்று அவனும் சிரித்தான்.
“ப்ரோட்டக்க்ஷனோட இருக்கேன்! ப்ரோட்டக்க்ஷனோட இருக்கேன்னு சொல்லி நீங்க என்னை ஏமாத்திருக்கீங்க..” என்று அருகில் இருந்த தலையணையை அவன் மீது வீசினாள்.
அதை பிடித்தவன், “அன்னைக்கு ஒருநாள் பாப்பா தூங்க லேட்டாச்சே.. அன்னைக்கா இருக்குமோ?” என்று தேவா உளறி கொட்டினான்.
“ஆமா உங்க பொண்ணு ஒருநாள் தான் லேட்டா தூங்குறா பாருங்க”
“இப்ப என்ன பண்ணுறது?” என அப்பாவியாய் கேட்டான்.
அவனின் இந்த தோரணையை ரசித்தவள், “இது நமக்கான சர்ப்ரைஸ் கிஃப்ட் தேவ்!” என அவ்வளவு நேரம் கோபம் போல் முகத்தை வைத்தவளின் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது.
“ஆனா மதி? பாப்பாவுக்கே இப்ப தான் ஒரு வயசு முடிஞ்சிருக்கு. நீ ஃபீட் பண்ணுறதயும் இப்ப தான் நிறுத்திருக்க. உன்னோட ஹெல்த் ஓகே வா?” என்றான் அவளின் கையை பிடித்து. உண்மையிலேயே அவளின் உடல்நலனைவிட மனநலன் தான் தேவாவிற்கு பயத்தை கொடுத்தது.
“இந்த குட்டி வரப்ப நம்ம வானுக்கு ரெண்டு வயசு ஆகிருக்கும் தேவ்! சரியா தான் இருக்கும். அப்புறம் நீங்க தான எங்களை கவனிச்சிக்க போறீங்க?” என்று கண்ணடித்து கூறினாள்.
அதில் அவளுக்கு சிரிப்பு வர, “ஆமா. வானு வந்தப்ப ஸ்வீட்டோட தான சொன்னீங்க? இப்பவும் அப்படி தான்” என்று அவனை கிண்டலடித்தவளை முழித்து பார்த்தான்.
விஷயம் கேள்விபட்ட அனைவரும் வாழ்த்தினாலும் ‘அதற்குள்ளா?’ என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழாமல் இல்லை. நாகரீகம் கருதி யாரும் கேட்டுக் கொள்ளவில்லை.
ஆனால் வந்தனா, “அதுக்குள்ளயா? வானுக்கு இப்ப தான ஃபர்ஸ்ட் பர்த்டே முடிஞ்சிது” என அனைவர் முன்னும் கேட்டுவிட்டாள். சாருமதி சங்கடமாக பார்க்க, தேவா கவனம் முழுவதையும் கையில் இருந்த வான்மதியிடம் திருப்பிவிட்டான்.
சாருமதி ஜெயந்தியிடம் தனியே சிக்க, “அதுக்குள்ள எதுக்கு சாரு? உன்னோட உடம்பையும் பார்க்கனும்ல?” என்று பொறுமையாக கூறினார்.
‘இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?’ என்று அமைதியாக இருந்தவள், “ஏன் மா? இங்க வந்தா நீங்க எனக்கு பார்க்க மாட்டீங்களா?” என்றாள் உரிமையுடன்.
“அதுக்கு நீ இங்க வரணும் சாரு. உங்கம்மா எதாவது சொன்னா உனக்கு கோபம் வந்து முறுக்கிக்கிட்டு இங்க வர மாட்டிங்குற?” என்று கோமதியும் ஆதங்கமாக கூறினார்.
ஜெயந்தியும் அவரிடம், “உங்க பேத்தி இங்க வரவே மாட்டிங்கிறா..?” என்று குறை கூறியிருந்தாரே!
பாட்டியை பார்த்தவள், “டோன்ட் ஒர்ரி கோம்ஸ்! ரெண்டு வாரம் இங்க இருந்திட்டே கிளம்புறேன்” என்றவளை அதிசயித்து பார்த்தனர் இருவரும். எப்பொழுது வந்தாலும் காலில் சுடுத்தண்ணி கொட்டியது போல் ஓடுபவள் இப்படி சொல்லவும் அவர்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது.
தேவாவிடம், “நானும் வானுவும் ரெண்டு வாரம் இங்க தான் இருக்க போறோம்” என்றவளை கேலியுடன் பார்த்தவன், “அம்மா கூட ராசியாகிட்ட போல..?” என்றான்.
“என்னோட அம்மாகூட நான் சண்டை போடுவேன். சமாதானம் ஆகுவேன். உங்களுக்கென்ன?” என்றவள் சொன்ன மாதிரியே இருவாரம் தாய்வீட்டில் சீராடிவிட்டே கணவனின் வீட்டிற்கு சென்றாள்.
இம்முறை சாருமதிக்கு உணவில் எந்த ஒரு மாறுதலும் தேவைப்படவில்லை. அதுவே அவளுக்கு தளர்வாக இருக்க எதை பற்றியும் அதிகம் சிந்திக்காமல் இரண்டாவது பிரசவத்தை எதிர்கொள்ள தயாரானாள்.
ஒருநாள் இரவு வெகுநேரம் கழித்தே தேவா வீட்டிற்கு வந்தான். கதவை திறந்த சாருமதிக்கு அவனின் வித்தியாசம் புரிய முகத்தை சுழித்துக் கொண்டு சென்றாள்.
அவளின் பின்னே அறைக்கு வந்தவன், “ம..மதி!” என குளறலாய் கூப்பிட்டான்.
“அது கிளையன்ட் வற்புறுத்துனாங்க மதி என்..என்னால ஒரு கட்டத்துக்கு மேல மறுக்க முடியல. அதான்..” என நிற்கக்கூட முடியாமல் தள்ளாடினான்.
உணவு விஷயத்தில் அதிகளவு எண்ணையை சேர்க்க கூட யோசிக்கும் சாருமதியால் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
இதை இப்படியே விட்டால் தொடர்கதையாகிவிடும் என்று அவனிடம் சென்றவள் அவனை தட்டு தடுமாறி நடக்க வைத்து குளியலறைக்குள் அழைத்து சென்றாள்.
“குளிச்சிட்டு வாங்க” என ஷவரை திறந்துவிட்டு வெளியேறினாள். பின் சமையலறை சென்று அவனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தவள் அவனின் வரவுக்காக காத்திருந்தாள்.
குளித்துவிட்டு துண்டுடன் வந்தவனுக்கு போதை சற்று தெளிந்திருந்தது. அதனால் அவளின் முகம் பார்க்க கூட தயங்கிக்கொண்டே உடையணிந்தான். ஆனால் சாருவின் பார்வை முழுவதும் அவன் மேல் தான்! தீயாக அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
கட்டிலில் அவள் அருகில் தேவா அமரவர, “குடிச்சிட்டு வந்தவங்களுக்கெல்லாம் பெட்டில் இடமில்லை!” என தீவிரமாக சொன்னாள்.
அவளின் சொல்லில் மனதால் அடிவாங்கிய தேவா கீழே அமர்ந்தான். “சாரி மதி! இனிமே குடிக்க மாட்டேன்” என்றான் குனிந்துக்கொண்டே,
“சரி! அப்ப இன்னைக்கு குடிச்சிட்டு வந்ததுக்கு என்ன பண்ணலாம்? குடிச்சது மட்டுமில்ல அதோட வண்டியையும் ஓட்டிட்டு வந்திருக்கீங்க வேற?” என நெற்றிகண்ணை திறந்து அவனை எரித்துக் கொண்டிருந்தாள்.
தேவா வாழ்வில் முதல்முறை சறுக்கி இருக்கிறான். அதனால் அமைதியை கடைபிடிக்க சாருவே தொடர்ந்தாள். “நல்லவேளை தேவ்! இவ்வளவு நேரம் அத்தை என்கூட தான் இருந்தாங்க. நான்தான் தூங்க போக சொன்னேன். இல்லனா அவங்க பையனோட நிலைமையை அவங்களே பார்த்திருப்பாங்க” என கூறினாள்.
அதில் நிமிர்ந்து அவளை அடிபட்ட பார்வை பார்த்தான். உண்மை தானே! கணவனை இழந்து எவ்வளவு துணிச்சலாக ஒழுக்கமாக வளர்த்தார் செல்வராணி. இது தெரிந்தால் நிச்சயம் வேதனை அடைவார் என்றெண்ணினான்.
“நீங்க எதுக்கு தேவ் அப்படி பார்க்குறீங்க? நீங்க தான் ஜாலியா குடிச்சிட்டு என்ஜாய் பண்ணிட்டு வந்திருக்கீங்களே..” என்று இகழ்ச்சியாக கூறியவள்,
“பட் ப்ளீஸ் தேவ். அடுத்த முறை குடிச்சீங்கனா அங்கேயே தங்கிடுங்க. அப்டியே டிரைவ் பண்ணிட்டு வரது பாதுகாப்பு இல்லை!” என்றவளின் குரல் அழுகையில் கரைந்தது.
“என்கிட்ட எதுக்கு தேவ் சாரி கேட்குறீங்க? உங்களை நம்பி ஐம்பது வயசுக்கு மேல ஆன அம்மா காத்துட்டு இருக்காங்க, இதோ இன்னும் ரெண்டு வயசு கூடமுடியாத உங்க பொண்ணு காத்துட்டு இருக்கா, இது மட்டுமா? உங்களையே நினைச்சிக்கிட்டிருக்க நான்! எனக்குள்ள இருக்க ஐந்து மாச குழந்தை!” என அனைவரையும் கூறியவள்,
‘அவனை நம்பி இங்கு நான்கு உயிர்கள் இருக்க அவனோ குடித்தது மட்டுமின்றி குடித்துவிட்டு வண்டியும் ஓட்டி வந்திருக்கிறான்’ நிச்சயமாக அவனாலே அவன் செயலை மன்னிக்க முடியவில்லை.
“வெறும் வயிறா தூங்காம சாப்பிட்டு படுங்க தேவ். காலைல பேசிக்கலாம்” என்ற சாரு குழந்தையை அணைத்த மாதிரி படுத்துக்கொண்டாள்.
சாப்பிடவில்லை என்றால் மேலும் பேசுவாள் என்றுணர்ந்தவன் சாப்பிட்டான். பின் பெட்டில் உறங்கும் மனைவியின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். திருமணம் முடிந்து எவ்வளவு சண்டைகள் வந்திருந்தாலும், அவளின் மாதவிடாயின் பொழுதும் கூட அவளின் கையை பிடித்து அவளுடனே இந்த அறையில் உறங்கியவனுக்கு அவ்வளவு விரைவில் தூக்கம் வரவில்லை.
காலையில் எழுந்து தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான். முதல்முறையாக குடித்தது அவனுக்கு ஒற்றுக்கொள்ளவும் இல்லை! அவனிடம் எலுமிச்சை சாறை நீட்டிய சாருமதி, “குடிங்க சரியா போகும்” என்றாள்.
கட்டிலில் பொம்மைகள் சிதறி இருக்க வான்மதி விளையாடிக் கொண்டிருந்தாள். குளித்துவிட்டு சாருமதி கொடுத்த எலுமிச்சை சாறையும் அருந்தியவன் வான்மதியின் அருகில் அமர்ந்து அவளின் காலை பிடித்து, “அப்பாவை மன்னிச்சிடு பாப்பு!” குரல் தழுதழுக்க சொன்னான். அதற்கு குழந்தை கையில் இருந்த பொம்மையை கொடுத்து அவனை பார்த்து சிரித்தது.
அடுத்து சாருமதியின் வயிறை வளைத்து பிடித்தவன், அவளின் சூல்கொண்ட வயிற்றில் முகம் புதைத்து கருவில் உள்ள குழந்தையிடம் மன்னிப்பு கேட்டான். அதுவும் அதனின் அசைவை உணர்த்த இறுதியாக நிமிர்ந்து சாருவை பார்த்தான்.
இரவில் அவனை குற்றம்சாட்டி பேசியவள், இப்பொழுது அவனின் இதழில் முத்தமிட்டு விலகினாள். “எல்லாம் சரியாகிடும் தேவ்! எதையும் யோசிக்காதீங்க. அம்மா, பாப்பா, வயித்துல இருக்க குட்டி எல்லாரும் அப்பாவை மன்னிச்சிட்டோம்!” என்று சொல்லி அவனின் முதுகை வருடி கொடுத்தாள்.
பின், “அத்தை கிட்ட உங்களுக்கு அங்க சாப்பிட்டது ஒத்துகலைன்னு மட்டும் சொல்லிருக்கேன் தேவ். அதுக்கூட நான் லெமன் ஜூஸ் எடுத்திட்டு வரதை பார்த்து கேட்டாங்க அதான் சொன்னேன்” என்றாள்.
நிமிர்ந்து அவளின் முகத்தை, ‘ஏன்?’ என்னும் விதமாக பார்த்தான்.
“சொன்னா அத்தை வருத்தப்படுவங்களே தேவ்!” என்றவள்,
“அதுமட்டுமில்ல! நீங்க தான தேவ் சொல்லுவீங்க சில விஷயம் நம்ம அறையை விட்டு வெளிய போக கூடாதுன்னு அதான். என்னோட தேவ்வை யாரும் குறை சொல்ல கூடாது!” என குற்றவுணர்ச்சியில் தத்தளித்தவனை தாங்கி பிடித்தாள்.
ஒருவரின் குறையை மற்றவர் பெரிதுப்படுத்தாமல் சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் சுட்டிக்காட்டி, தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக்கொடுத்து அவர்களின் உறவையும் உரிமையையும் பேணி காத்தனர்.
அப்படியே அவளை அணைத்துப் பிடித்தவன் குழந்தையின் அசைவையும் உணர்ந்துக் கொண்டிருந்தான். அவர்களை பார்த்த வான்மதியும் வேகமாக தவழ்ந்து வர சாருவின் வயிற்றில் இடிக்கும் முன் அவளை கை வளைவில் கொண்டுவந்த தேவா அவளையும் ஒருபுறம் அணைத்துக் கொண்டான்.
மாலைப்போல் அனைவரும் குடும்பமாக கோவிலுக்கு சென்றனர். கடற்கரையை ஒட்டிய அஷ்டலட்சுமி கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு கடற்கரையில் வந்து அமர்ந்தனர்.
இருள் கவிழும் மாலை வேளையில் தேவாவும் வான்மதிவும் கடலில் கால் நனைக்க சென்றனர். சாருமதியும் செல்வராணியும் மணல் பரப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
தண்ணீரில் இருந்த படியே அவர்களை பார்த்த தேவாவிற்கு எதோ தவறாக பட குழந்தையுடன் அவர்களின் அருகில் வந்தான்.
அவ்வளவு நேரம் சற்று தள்ளி சாருமதியின் நகையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவன் தேவாவை பார்த்ததும் நகர்ந்து சென்றுவிட்டான்.
‘அவன் சும்மா தான் பார்த்தானா? இல்லை எனக்கு தான் தப்பா தெரிந்ததா?’ என்று நினைத்தவன் சுற்றியும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.
மெரினா போல் கூட்டமில்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் அமர்ந்திருந்தனர்.
பின், “கிளம்பலாம்” என்ற தேவா அன்னையையும் மனைவியையும் முன்னே நடக்கவிட்டு குழந்தையை தூக்கியபடி சுற்றும் முற்றும் பார்த்தபடியே பின்னே நடந்தான்.
‘இப்படிபட்ட சமூகத்தில் தான் வாழ வேண்டும்! அதும் பெண்குழந்தை வேறு இருக்கிறாள்!’ என்ற பயம் அந்நொடி தேவாவின் மனதை ஆக்கிரமிக்க தொடங்கியது.
இரவில் அதனை சாருமதியிடமும் பகிர்ந்துக்கொண்டான். அவளோ இம்முறை அதிகம் யோசிக்கவில்லை. “நம்ம பாப்பாவை நாம தைரியமா இந்த சமூகத்தை எதிர்கொள்ளுற மாதிரி வளர்க்கனும் தேவ்” என்று அவனின் பயத்தை போக்க கூறினாள்.
அம்மா, அப்பா இருக்கும் நம்பிக்கையில், கடலில் விளையாடிய களைப்பில் தேவாவின் மேல் கால் போட்டுக்கொண்டு ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தாள் அவர்களின் பெண்ணரசி வான்மதி!
அவளை பார்க்க பார்க்க தந்தையாக இந்த சமூகத்தை நினைத்து பயம் எழுவதை தேவாவால் தடுக்க முடியவில்லை!
சாருமதிக்கு ஒன்பதாம் மாதம் தொடங்கியிருந்தது. “இந்த முறை நான் பிரசவம் முடிஞ்சதும் அம்மா வீட்ல இருந்திட்டு வரட்டுமா தேவ்? உங்களுக்கு வேணாம்னா எனக்கும் வேணாம்” என்றாள் முகத்தை சுருக்கி.
ஏனோ! இம்முறை அம்மாவின் அருகாமையை சாருமதியின் மனம் அதிகம் தேடியது. சாருமதி வளரும் வரை பாட்டியின் செல்லமாக வளர்ந்து ஒரு குழந்தைக்கு தாயானதும் தான் தாயின் அருமையை புரிந்துக் கொள்கிறாள்.
அவளை ஆழ்ந்து பார்த்த தேவா, “இந்த ரூம்ல இதே இடத்துல தான் அம்மா வீட்டிக்கு போக மாட்டேன்னு சொன்ன? இப்ப அங்க போகவானு கேட்கிற?” என்றான்.
ஏதும் சொல்லாமல் முழித்தவளை பார்க்க பார்க்க தேவாவுக்கு தெவிட்டவில்லை. அவனின் மதி முழுமதியாக தோன்றி அவனின் மதி முழுவதும் ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறாள்.
“உனக்கு இங்க இருக்கணும்னு தோனுதா? இங்க இரு! அங்க போகணும்னு தோனுதா அங்க போ! எங்க இருந்தா உனக்கு ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்குமோ அங்க இரு மதி! எனக்கு உன்னோட நிம்மதி தான் வேணும். நல்லபடியா குழந்தை வந்தா போதும்” என்றவனை காதலாக பார்த்தவள்,
“இதுக்கு தேங்க்ஸ் சொல்ல மாட்டேன்” என்றாள்.
“எனக்கும் வேணாம்” என்றவன் அவளின் நுதலில் இதழ் பதித்தான்.
இம்முறை சாருமதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சாருமதி கூட அவ்வளவு அழுதிருப்பாளா தெரியவில்லை. அவளை பிரசவ அறைக்கு அழைத்து செல்லும் முன் தேவாவும் வானுவும் கண்கலங்கி விட்டனர்.
அதுவும் தேவாவின் கழுத்தை கட்டிக்கொண்டு, “அம்மா..” என்று அழுத வான்மதியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டவன், “அம்மா சீக்கிரம் பாப்பாவோட வந்திடுவாங்க டா” என்று அவனுக்கும் சேர்த்து சமாதானம் கூறிக்கொண்டான்.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து ஒருவாரம் கடந்திருந்தது. சாருமதி, அவளின் வீட்டில் தான் இருந்தாள். சில நேரம் வான்மதியை தேவா அழைத்து சென்று அவனுடனும் வைத்துக் கொள்வான்.
அன்றிரவு குழந்தைக்கு பால் கொடுத்து படுக்க வைத்தவள், “இவன் வானு மாதிரி இல்லை தேவ்! மதியம் முழிச்சிருக்கான். நைட் தான் தூங்குறான்” என சிரிப்புடன் சொன்னவளை கூர்ந்து பார்த்தான் தேவா.
“வானு பிறந்த நேரம் அத்தை இதையே சொன்னப்ப சண்டை போட்ட? இப்ப நீ என்ன பண்ணிட்டு இருக்க மதி?” என்றான். அதில் திகைத்து விழித்தாள் சாருமதி.