எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா -16

subasini

Moderator
மனம் - 16

புதிய தொடக்கம் என்பது எல்லோரோட வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் வரும்…
அதியமானும் போய் நின்றான்.

ஆயிரமாவது முறையாகத் தான் எடுத்த முடிவுச் சரிதானா என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தான் அதியமான்.

எல்லாச் சூழ்நிலையிலும் வார்த்தைகள் கொண்டு நம்பிக்கையை உண்டாக்க முடியாது.

சில நேரங்களில் நம் செயலும் தான் எதிரில் இருப்பவருக்கு நம்பிக்கையைத் தரும். அதை மனதார நம்பினான் அதியமான்.

பெற்றவளிடம் நம்பிக்கை இழக்கக் காரணம் தன் கல்யாணமும் தனக்கான குடும்பமும் என்றால்... இந்தக் கல்யாணத்தினால் தன் தம்பிக்கும் அவன் குடும்பத்திற்கும் தான் உருவாக்கிக் கொடுத்த சொத்துக்கள் எதுவுமே அவன் இழக்க நேரிடாது என்பதை வார்த்தைகளால் சொல்வதை விடச் செயல்களால் புரிய வைக்க முடிவுச் செய்தான் அதியமான்.

இந்த முடிவுகள் எல்லாம் சுலபமாக எடுக்க முடிந்தது அவனால் ஆனால் உணர்வுகளால் அவன் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டான்.

இவ்வளவு காலமும் தன் குடும்பம் என்று நினைத்திருந்தவனுக்கு உன் குடும்பம் இதில்லை எனச் சாந்திச் சொல்லாமல் புரிய வைத்தார்.

தனக்கு என்று ஒரு குடும்பம் வந்தால் தாயையும் தம்பியும் விட்டு விடுவேன் என்று எப்படி அவர் நினைத்தார் என்பது அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனால் இதுதான் உலக வழக்கம் என்பது புரிந்துக்கொள்ள மறுத்தான் அதியமான்.

பணம் மட்டுமே உறவுகளின் அன்பையும் பாசத்தின் ஆழத்தையும் உணர்த்தும்... உணர வைக்கும் என்பது வரும் காலம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கும்.

இரவு உணவினை முடித்துத் தன் அறைக்கு வந்து பால்கனியில் நின்று கொண்டு நிலவைப் பார்த்தப்படி யோசனையில் ஆழ்ந்தான் அதியமான்.

முதல் ராத்திரியில் தன் மனைவியிடம் தனக்கான புதிய வாழ்க்கையைத் தொடங்க அவனுக்கு மனம் லயிக்க வில்லை…

கையில் பாலோடு தன் கணவனின் முன் வந்து நின்றாள் தாரா. கட்டிலில் அமரன் உறங்கிக் கொண்டிருந்தான்.

இரவின் இருட்டில் வாழ்க்கையின் வெளிச்சத்தைத் தேடிக் கொண்டிருக்கும் தன் கணவன் முன்னால் வந்து நின்றாள். அவளுக்கும் புரியத்தான் செய்தது இருவரும் பல வருடங்கள் மனம் ஒத்துத் தம்பதியராக வாழ்ந்து இருக்கவில்லையே… அவனுக்கு என்ன ஆறுதல் சொல்வது எப்படி நம்பிக்கைத் தருவது என்று எதுவுமே தெரியவில்லை தாராவிற்கு.

இந்தாங்கப் பால் என்று அவன் கைகளில் கொடுத்தாள் தாரா.

அவள் தந்தப் பால் டம்ளரைக் கைகளில் வாங்கியவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில் அன்பும் அமைதி மட்டுமே இருந்தது முதல் ராத்திரியில் காதல் வசனம் பேச வேண்டியவனோ அவளிடம் வாழ்க்கையில் எதார்த்தம் பேசத் தயாராகினான்.

அவள் கைகளைப் பிடித்துப் படுக்கையறைக்கு அழைத்து வந்தவன் அவளை அமர வைத்தான் பாலைப் பாதிக் குடித்துவிட்டு மீதியை அவளுக்குக் கொடுத்தான்.

அவளும் அதை வாங்கிக் குடித்துவிட்டு டம்ளரை மேசையின் மேல் வைத்துவிட்டுத் திரும்பியதும் … அவள் அருகே வந்தவன் அவளை அமைதியாகப் பார்த்தான்.


மௌனமே அங்கு நாடகமாக அரங்கேறிக் கொண்டிருந்தது.

அவளுக்கும் எப்படிப் பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரியவில்லை.

அவனுக்கோ மனம் குழப்பமான நிலையில் இருந்தது எதுவாக இருந்தாலும் பேசிப் பின்னே தங்களுடைய வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால் அதியமான் மெல்ல அவளிடம் தயங்கியபடியே “தாரா” என்று அழைத்தான்

அவளும் “ம்ம்” என்றாள்…

“இப்போ இருக்கும் சூழ்நிலையில் முதல் ராத்திரியைக் கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை” என்றான் தெளிவாக.

“புரியுதுங்க” என்றாள் தாரா…

அவளின் உடனடிப் பதிலில் சட்டெனச் சிரிப்பு வந்தது அதியமானுக்கு “என்ன புரிஞ்சது உனக்கு” என்று கேட்டான்.
சிறு அமைதிக்குப் பின் மெதுவாக “அத்தைக்கு நான் உங்க வீட்டு மருமகளாக வந்தது பிடிக்கவில்லை… எனக்குத் தெளிவாகத் தெரியுது… அந்தக் கோபத்தை உங்களிடம் காட்டுறாங்கன்னுப் புரியுது, அவங்களோட சூழ்நிலையை நாமும் புரிந்துக் கொள்ளவேணும் தானே” என்றாள் தாரா.

அப்போ அவளிடம் அவன் “ஏன் அவங்களுக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று யோசிக்கிற நீ”… என்று நேரடியாகவே கேட்டான் அதியமான்.

“அவர்கள் பார்த்தப் பெண் நான் இல்ல … கையில் ஒரு பிள்ளையோட மருமகளாக வந்து நிற்கும் பெண்ணை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்… யாராக இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும்” என்றாள் தாரா.

“ஓஹோ... பார்ரா… என் பொண்டாட்டியும் அறிவாளி" என்று சிரித்தான்…

அவனின் கிண்டலில் முறைத்துப் பார்த்தாள் தாரா… அவள் கோபம் பார்வையைப் பார்த்து அவளின் அருகே நெருங்கி வந்து நின்றவன்

“இப்படி எல்லாம் பார்த்தா மாமா மனசு மாறிடும்” என்று அவளிடம் கிசுகிசுத்தான் காதலில்.

அவன் அருகாமையில் அவள் உடல் சிலிர்த்தது அதை அருகில் இருந்து ரசித்தான் அதியமான்.

பின் அவள் அருகே வந்து படுக்கையில் கீழே மண்டியிட்டு அமர்ந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“தாரா என்னுடைய பிசினஸ் இந்த வீடு இந்தச் சொத்து எல்லாமே நானாகக் கஷ்டப்பட்டு உண்டாக்கினது, ஆனால் நம்மளுடைய இந்தக் கல்யாணம் இதெல்லாத்தையும் இழந்து நிற்கும் கட்டத்துக்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கு, அதற்கு உன் மாமியாரோட நம்பிக்கையின்மைத் தான் காரணம்.

இவ்வளவு செய்த நான் அவங்களையும் என் தம்பியையும் கல்யாணத்துக்குப் பிறகு பார்த்துக் கொள்ள மாட்டேனா! அவர்களை ஏமாற்றி விடுவேன் அநாதரவாகத் தெருவில் விட்டு விடுவேன் என்ற பயம் தான், என் மேல் உள்ள நம்பிக்கை இழக்கச் செய்து இருக்கிறது. நான் என்ன செய்ய வேணும் என்று எனக்குத் தெரியவில்லை” என்றான் தன் மனைவியிடம்.

“கல்யாணமாகி முதலிரவில் காதலோடு சல்லாபிக்க வேண்டிய உன்னிடம் என்னுடைய பிரச்சினைகளையும் குடும்பச் சூழ்நிலையும் கூறுவதே எனக்கு மிகவும் வேதனையும் அவமானமுமாக உள்ளது” என்று வெளிப்படையாகவே தன் சூழ்நிலையைப் பற்றித் தாராவிடம் பகிர்ந்தான் அதியமான்.

மனைவி என்பவள் எல்லாமுமாகத் தன் வாழ்க்கையில் அவளை அமர்த்தினான்.

அவளுக்கும் புரிகிறது எதனால் சாந்திக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்று… முறையற்ற வாழ்க்கை வாழ்ந்ததவளாக அவரளைக் கருதுகிறார் என்பதும் தெளிவாகப் புரிந்தது.

என்னதான் காலம் மாறினாலும் சமூக மாறினாலும் சில விஷயங்கள் மாறுவதில்லை என்பது நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்த தாராவிற்குத் தெளிவாகப் புரிந்தது.

“நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்குச் சம்மதம்தான்… இந்தக் கல்யாணம் அமரனுக்காகத் தானே நீங்க பண்ணுனீங்க… நான் உங்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவாக இருக்க மாட்டேங்க” என்று அவனிடம் கூறினாள் தாரா.
அமரனுக்காகவா!!! என்று சத்தமாகச் சிரித்தபடியே எழுந்து நின்றவன்.

"என்னடி இப்படிச் சொல்லிட்ட... கல்யாணத்துக்கு முன்னமே உன்னை நான் கிஸ் பண்ணி இருக்கேன்… அதுவும் எவ்வளவு டீப்பா…‌ அப்படி இருந்தும்… நீ இப்படி உலறிக் கொண்டு இருந்தால்… நான் என் முடிவை மாற்றிக் கொண்டு... இப்போவே முதல் ராத்திரியும் முடிச்சு… இந்தக் கல்யாணம் நான் உனக்காக மட்டும் தான் பண்ணினேன்… என்று உணர வைக்க நேரிடும்… என்ன வைக்கட்டா” என்று ஹஸ்கியான குரலில் கேட்டவன்... பின்

“நீ இப்படித் தப்பாக எதையேனும் யோசிச்சு... ஓல்ட் மூவியில் வரும் ஹீரோயின் மாதிரிச் சிந்திக்காதே” என்றான் அதியமான்.

“அப்போது இந்தக் கல்யாணம்” என்று வார்த்தைகளை இழுத்துப் பேசிய வளை நேருக்கு நேர்ப் பார்த்து…



“எனக்காக…‌ என் மனைவியாக நீ மட்டுமே என் வாழ்க்கையில் வர வேண்டும் என்றும் … உனக்காக உன் வாழ்க்கையில் நான் மட்டுமே என்றைக்கும் எப்பொழுதும் உன்னுடன் இருக்க வேண்டும் என்று உன்னைக் கரம் பிடித்தேன்” என்று அவள் அருகே வந்தவன் மென்மையான அவள் அதரங்களை வன்மையாக முத்தமிட்டு, தன் காதலை, தாராவின் மனதில் பதியமிட்டான் அதியமான்.

இந்த முத்தத்தில் அவன் காதலைக் கடத்தி அவள் மனதில் ஆழத்தில் புதையுண்டுக் கிடக்கும் அவள் காதலைத் தோண்டி எடுத்தான் கணவனாக.

அவனின் இந்த முத்தம் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் கைகளில் அவளை இழக்கச் செய்தது…

தன்னவளின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவன் மெல்ல அவளை விடுவித்தான்…

கால்களின் பலமிழந்துத் தடுமாறியவளைத் தன்னோடு அணைத்தவன்… இப்போதே என்னால் உரிமையாக நம் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும் தாரா… ஆனால் அதெல்லாம் ரொம்ப அழகாக நடக்க வேண்டும் எனக்கு… என் மனதிலும் சரி உன் சிந்தனையிலும் சரி நம் காதல் மட்டுமே வலம் வர நான் உன்னை ஆளவேண்டும்” என்றான் அதியமான்.


அவனின் வார்த்தைகளில் இருக்கும் யதார்த்தம் அவளை நிதானமாக்கியது…

மெல்ல அவன் முகம் பார்த்தவளை… நாளைக்கு நான்.. என் பிஸினஸ் மற்றும் இந்தச் சொத்து எல்லாமே அம்மாவிடம் ஒப்படைத்து விடுவேன் தாரா…

நாளையிலிருந்து நமக்கான புதிய வாழ்க்கையை நான் பூஜ்யத்தில் இருந்து தொடங்க‌ப் போகிறேன்…

ஒவ்வொரு பெண்ணிற்கும் தன்னைத் திருமணம் செய்யும் ஆண் மகன் நல்ல செட்டில்டாக இருக்கணும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்… ஆனால் உனக்கு…‌ நான்" என்ற வார்த்தை வராமல் தடுமாறினான் அவமானத்தில்…

அவனின் முடிவுச் சரியானதா என்று தெரியவில்லை… ஆனால் அவனுக்குத் துணையாக நான் இருக்கிறேன் என்று அவள் காதல் மனம் கூவியது…

"நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்குச் சம்மதங்க… இந்த வசதி வாய்ப்புகள் எல்லாம் மீண்டும் உங்களால் உருவாக்க முடியும் என்று‌ நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. உங்களுக்கு எல்லா வகையிலும் நான் துணையாக இருப்பேன்" என்று அவனை அணைத்தாள் தாரா.

ஒரு மனைவியாக அவனுக்குத் தூண் போல நின்றாள் அவன் தடுமாறி நேரத்தில்.

தன்னை அணைத்தபடி நிற்கும் அவள் காதலில் கண் கலங்க அவள் முகம் பார்த்தவன் "இந்த நல்ல மனம் தானடி உன் மேல் பித்தம் கொள்ளச் செய்கிறது" என்றான் அதியமான்.


"நாளைக்கு என்ன செய்யப் போறீங்க அது முதலில் சொல்லுங்க அதற்குத் தகுந்த மாதிரித் தயாராகணும்" என்றாள் தாரா…

இனியனிடம் அவன் கூறிய அனைத்தையும் அவளிடம் கூறினான்…எல்லாம் பொறுமையாகக் கேட்டாள் தாரா.

தன்‌ பங்கிற்கு அவனுக்கு ஆலோசனை வழங்கினாள்.
எப்படி அவன் தொடங்கப் போகும் கம்பெனியில் என்ன செய்யலாம் என்று… அவளின் நுணுக்கமான அறிவுரைகள் கேட்டு அசந்தவன் தன் தொழிலில் அவள் எவ்வளவு உறுதுணையாக இருப்பாள் என்று புரிந்தது.
தங்கள் முதல் ராத்திரியில் எதிர் காலம் பற்றிய பேச்சில் நேரத்தைக் கடத்திய இந்தப் புதுமணத் தம்பதியர் மெல்லக் கண் அயர்ந்தனர்…

விடியல் புதிய விடிவைக் கொண்டு வந்தது… நேரமாக விழிப்புத் தட்டியதில்.. கண் திறந்தவள்.. கணவனும் மகனும் அயர்ந்து உறங்கும் அழகை ரசித்தவள்…‌ நேரமாவதை உணர்ந்ததும் வேக‌ வேகமாக‌ மகன்‌ விழிக்கும் முன்பே தன் வேலைகளை முடிக்க ஆயத்தம் ஆனாள் தாரா…

காலையில் பூத்தப் புதிய மலரைப் போலக் குளித்து விட்டு வந்தவள் மெல்லிய அலங்காரம் செய்து தன்னை அழகுப்படுத்தினாள்.


பின் கீழே வந்து பூஜை அறையில் விளக்கேற்றிச் சாமிக் கும்பிட்டவள், மெல்லிய ஓசையில் சுப்ரபாதம் ஒலிக்க விட்டாள்.

காலை உணவிற்குச் சமைக்க ஆயுத்தம் செய்யத் தொடங்கிய நேரம் உமாவும் வந்து அவளுக்கு உதவி செய்யத் தொடங்கினாள்…

"அக்கா எல்லாம் ரெடி.. நான் அவருக்கும் பையனுக்கும் டீ மற்றும் பால் குடுத்துட்டு வரேன் நீங்கள் இங்கே பார்க்கீறீங்களா" என்றாள்…

"சரி கண்ணு... நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொன்னதும் அழகான ஒரு புன்னகையைச் சிந்தியவள் மகனுக்குப் பாலும் கணவனுக்கு டீயும் எடுத்துக் கொண்டு சென்றாள் தன் அறைக்கு.

உறக்கம் கலையக் கண் திறந்த சாந்திக்கு வீட்டின் சூழ்நிலையில் ஏதோ மாற்றம் தோன்ற வேகமாகக் கண் விழித்தார்.

தன்னைச் சுத்தம் செய்து வெளியே வந்தவர் கண்டது பக்தி மனம் ததும்பும் வீடும்… அதன் அழகும் தான்…

மனம் நிம்மதி அடைந்த போதும் இதெல்லாம் தாரா, செய்கிறாள் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனக்கான டீக்கு உமாவை அழைக்கப் போகையிலே, அவளே டீக்கோப்பையோடு அவர் முன் வந்து நின்றாள்.

தன் முதலாளி அம்மா மனம் மட்டுப் பட்டதா என்று அவர் முகத்தை ஊன்றிக் கவனித்தில், அதிருப்தியே அவளுக்குப் புலப்பட்டது. இந்த அம்மா தாராவிடம் நல்ல முறையில் பழக மாட்டார்கள் என்பதை மனதில் நினைத்தாளே அன்றி வெளியே சொல்லவில்லை அது சரியும் அல்ல என்று நன்றாகத் தெரியும் உமாவிற்கு... தன் தகுதி அறிந்து நடந்து கொண்டாள் உமா.

தங்கள் அறைக்கு வந்தவள் கணவனை எழுப்பினாள் தாரா…

ம்ம் என்று சினிங்கயவன் மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தான்.. அவனின் இந்தச் செயலில் இருக்கும் சிறு பிள்ளைத் தனத்தை ரசித்த படி என்னங்க நேரமாச்சு என்றாள் தாரா.

மெல்ல, கண் விழித்தவன் கண் முன்னே குளித்து அழகாக இருந்தாள் தாரா… அவள் முகத்தையே பார்த்தவன் "ஏதோ குறையுதே" என்றான்.

"என்ன சொல்றீங்க" என்று சட்டெனக் குனிந்துப் பார்த்தவளின் செயலில் சிரித்தவன் அதெல்லாம் குறையல நிறையவே இருக்கிறது… என்று விசமமாகக் கூறியவன்.. வேகமாக எழுந்தான்…

அரைக்கால் சட்டையில் வெறும் மேலோடு எழுந்தவன் வேகமாக அங்கே இருக்கும் டிரஸிங் டேபிலில் தேடினான்…

"என்னங்க, தேடறீங்க... டீ ஆறவிட்டு வேடிக்கைப் பார்க்காமல் வந்து இதைக் குடிங்க" என்றாள் தாரா.

அவள் கூறுவதைக் காதில் வாங்காமல் அவள் பெட்டியைக் குடைய ஆரம்பித்தான்… உடனே வேகமாக வந்தவள்.. அவன் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி "என்ன தேடறீங்கச் சொல்லுங்க, நான் எடுத்துத் தருகிறேன்" என்றாள்…

அவள் நெற்றியின்‌ வகுட்டில் விரல் வைத்து "நீ இங்கே குங்குமம் வைக்கவில்லை... அதுதான் எனக்குக் குறையாகத் தெரிகிறது" என்றான்.

அவள் அவசரத்தில் வைக்க மறந்து விட்டாள் என்று உணர்ந்தவள்.. "சாரி அமரன் கண்
வழிப்பதற்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை மறந்துட்டேன்" என்றவளின் பதில் அவனை வருத்தியதோ…

தன் பேக்கில் வைத்திருக்கும் குங்குமம் எடுத்தவள் அவன் அருகே வந்து நீட்டினாள்…

என்ன என்று பார்த்தவனை…
கண்களால் வைத்து விடச் சொன்னாள்… அவளின் விழி மொழியில் மயங்கியவன்… அவள் சொன்னதைச் செய்யாமல் அவளையே பார்த்தான் அதியமான்.

ப்ளீஸ் என்று அவன் நெருங்கி வந்து "ம்ம் வச்சு விடுங்க" என்றாள் தாரா.

அவள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்தவன் "இப்போ தான் அழகா இருக்கே" என்று அவளை அணைத்தான்…

"ம்ம் விடுங்க... உங்க டீ ஆறிப்போச்சுப் பாருங்க... நான் போய் வேற‌ எடுத்துட்டு வரேன் நீங்க அமரனை அழுதால் இங்கே பால் இருக்குக் குடிக்கக் குடுங்க" என்றாள் தாரா.

டீக் கோப்பையை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் வந்தாள்…
வந்து மீண்டும் டீயைத் தயாரித்துத் தன் கணவனுக்குக் கொண்டு சென்றாள். அவள் வருவதற்குள் அவனும் தயாராகி நின்றிருந்தான்…


அவனுக்கு டீயைக் கொடுத்தவள் வெளியே செல்ல எத்தனிக்கையில்…

"தாரா… அமரனையும் ரெடி ஆக்கிரு.. இன்றைக்கு நாம் புதிய வீட்டிற்குப் போறோம்" என்றான் அதியமான்…

"ஏங்க இப்படியொரு முடிவு, அம்மாவிடம் எல்லாம் குடுக்கப் போறீங்கள் தானே... அப்பறம் எதுக்கு நாம் தனியாகப் போகணும் அவங்க என்ன நினைப்பாங்க" என்றாள்.


"அதெல்லாம் எதுவும் நினைக்க மாட்டாங்க. நீ அவனையும் ரெடிப் பண்ணு…பார்த்துக்கலாம் " என்றவன் இனியனுக்கு அழைத்தான்.

"இனியா.. எல்லாம் ரெடியா டா" என்றான் அதியமான்…

"எல்லாம் தயார் பண்ணிட்டேன் மாப்ளே.. ஆனால் டாக்குமெண்ட் கையில் கிடைக்க இன்று மதியம் இல்லை என்றால் நாளைக்கு ஆகும் நினைக்கிறேன்" என்றான்…

"அப்படியா.. சரிடா மத்ததெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றவன் கீழே வந்தான்.


டைனிங் டேபிளில் முன் சதீஷ் மற்றும் சாந்தி அமர்ந்து இருந்தனர் காலை உணவு உண்பதற்கு.. அங்கே வந்து அமர்ந்த அதியமான் புதியவனாகக் காட்சி அளித்தான் இருவருக்கும்.

தொழில் துறையில் இருக்கும் கறார் மனிதனாக அவர்கள் முன் அமர்ந்து இருந்தான்.

உமா அவனுக்கு உணவுப் பரிமாற வரவும் வேண்டாம் என்று தடுத்தவன், "தாரா"
என்று அழைத்தான்…

அவன் அழைத்த சத்தத்தில் வீடே அதிர்ந்தது அந்தக் குரலில் பதட்டத்தோடு குழந்தையோடு கீழே வந்தாள் தாரா.

"சாப்பாடு எடுத்துவை" என்றவன்.. குழந்தையை வாங்கித் தன் மடியில் இருத்தி விளையாட்டுக் காட்டினான்…

அவனின் செயலில் பயந்தவள்.. வேகமாக எல்லாம் எடுத்து வைத்தாள் உமாவின் உதவியோடு…

இரண்டு வாய்ச் சாப்பிட்டவன் தன் தாயைப் பார்த்து…

"அம்மா… இந்த வீடு உங்கள் பெயரிலும்… இப்போ போய்ட்டு இருக்கும் பிஸினஸ் சதீஷ் பெயருக்கு மாற்றி எழுதிட்டேன்… இன்றைக்கு இல்லை என்றால் நாளைக்கு உங்க கையில் டாக்குமெண்ட் கிடைத்து விடும்… இந்தக் கம்பெனியில் உன்னோட போஸ்டிங் பெண்டிங் கில் இருக்கு. நீ எல்லாம் கத்துக்கோ… இந்தா இந்தப் பென்டிரைவில் எல்லாம் வச்சு இருக்கேன்… இனி‌ வரும் காலங்களில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று எல்லாம் தெளிவாக இருக்கும். ஆறு மாதங்கள் மட்டும் நீ வெளிநாட்டிற்குச் சென்று நான் சொன்னப் படிப்பை முடித்து விட்டு வா. அது‌ வரைக்கும் இனியன் எல்லாம் பார்த்துக் கொள்வான்"… என்றான் அதியமான்.

"அப்போ நீங்க என்ன பண்ணப் போறீங்க அண்ணா" என்று தன் சந்தேகத்தைக் கேட்டான் சதீஷ்.

"மூன்று மாதங்கள் முன் புதிய கம்பெனித் தொடங்கி அது‌ அப்படியே நிற்கிறது. அதை எடுத்துப் பார்த்துக்கொள்கிறேன். அது பற்றி நீ எதுவும் கவலைப் படாதே" என்றான் அதியமான்.


"அதெல்லாம் ‌நீங்கள் சக்ஸஸ் ஆகிடுவீங்க அண்ணா" என்றவன் ஏதோ சொல்ல வருவதும் தயங்குவதமாக இருந்தான் …

என்ன சதீஷ் கேளு என்றான்.

"இல்லை நீங்கள் இப்போது எல்லாம் எழுதித் தந்துட்டு.. பின்னாடி உங்கள் மனைவியோ மகனோ இதெல்லாம் எங்கப்பாவோட சொத்து என்று வந்தால்" என்று முடிக்கும் முன்பே…

“என் மனைவி உன்னோட அண்ணி, அந்த மரியாதை எப்போதும் இருக்க வேண்டும் சதீஷ்” என்றான்..


அதியமானின் இந்த மற்றொரு முகம் கண்டதும், சாந்திக்கு மனதில் தவறிழைத்து விட்டோமோ என்ற பயம் தோன்றியது… இருந்தும் தன் மௌனத்தைக் கலைக்கவில்லை.

தன் தாயை நோக்கியவன்… “நாங்க இன்றைக்கு எங்கள் அப்பார்ட்மெண்டிற்குக் குடிப் போறோம் அம்மா” என்று அடுத்தக் குண்டைத் தூக்கிப் போட்ட‌மகனின் இந்த முடிவை எதிர் பார்க்கவில்லை சாந்தி…

தன் மருமகளை முறைத்த அவரின் பார்வையில் “அவளுக்கே இது தெரியாது … நான் அவளிடமே சொல்லவில்லை…‌ உங்களிடம் தான் முதன் முறையாகச் சொல்கிறேன்” என்றான்.

“வீடு விட்டுப் போறேன் சொல்லறது நன்றாக இல்லை தம்பி” என்று தன் மௌனத்தைக் கலைத்தார் சாந்தி.

“புரியுது அம்மா.. ஆனால் என் மனைவிக்கு மரியாதை இல்லாத இடத்தில் எனக்கும் மரியாதை இருக்காது என்று நினைக்கிறேன்” என்று வெளிப்படையாகத் தன் மனத்தாங்கலைக் கூறினான் அதியமான்.

“நாளைக்குச் சதீஷ் திருமணம் செய்து இந்த வீட்டிற்கு வருவாள் தாராவோட உடன் பிறந்தவள்… அவள் முன் என் மனைவியை மரியாதை இல்லை நடத்தினால் நன்றாக இருக்காது” என்றான்.

"முடிவே பண்ணிட்டியா, தம்பி" என்றார்ச் சாந்தி.

ஆமாம் என்றான் அதியமான்.

“என்ன சொல்ல இப்படி மனைவி பாட்டுப் பாடி அம்மாவை விட்டுட்டுப் போவாய் என்று நான் நினைக்கவில்லை… அப்போ என் பயம் உண்மை என்று நிருபனம் ஆகுது, பார்த்தாயா” என்று அவனிடம் முறையிட்டார்.

“நான் உங்களுக்கு நல்ல மகனாக இல்லை என்றே இருக்கட்டும் அம்மா… என்னை நம்பி வந்த பெண்ணைக் காயப்படுத்தும் சூழலைச் சரி பண்ணும் கடமை என்னோடது” என்றவன் கையைக் கழுவ எழுந்தான்.

“புகுந்த விட்டிற்கு வந்து இரண்டாம் நாளே புருஷனைப் பிரித்துத் தனிக்குடித்தனம் போகும் சாமர்த்தியம் யாருக்கும் வராதுச் சாமி” என்றவர் அங்கிருந்துச் சென்றார், தாராவின் மாமியார்.

தன் மாமியாரின் குற்றச்சாட்டுக் கேட்டுக் கண் கலங்கிய தாரா வேகமாகக் கணவனிடம் வந்தாள்.

அவனோ தன் அறையில் தனக்கான பெட்டியை அடுக்கிக் கொண்டு இருந்தான்.

கணவனின் முடிவை மாற்றிக் கொள்ள முயற்சிச் செய்வாளா…அவன் தான் அவள் பேச்சைக் கேட்பானா... என்பது கேள்விக்குறித் தான்…

தொடரும்…
 
Top