எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 12

subasini

Moderator
மனம் - 12

அன்பு எல்லாவற்றையும் மன்னிக்கும்…

பாசம் அரவணைத்துச் செல்லும்…

கங்காதரனின் அன்பும் பாசமும் அதியமானை மன்னித்து அரவணைத்தது…

எல்லாம் அவன் கட்டுபாட்டிற்கு வந்தது…

கங்காதரன் தம்பதியருக்கு அவன் மேல் பாசத்திற்கு மீறிய மரியாதை உண்டானது.

அவ்வளவு நேர்த்தியாக எல்லாம் கையாண்டான்.

இதோ ஒரு வாரத்தில் உடல் நலம் தேறி வீட்டிற்கு வந்தார் கங்காதரன்.

புனிதாவிற்கோ... தாராவின் மேல் கோபம் இருந்தது... ஆனால் அதியமானின் மேல் எந்தக் கோபமும் இல்லை. அவனிடம் அவர்கள் மிகவும் பாசமாக இருந்தனர். எந்த முடிவும் அவனைக் கேட்டே எடுத்தனர். அந்த அளவிற்கு அவர்களுக்கும் அவனுக்குமான உறவு பலமாக இருந்தது.

இதெல்லாம் பார்த்தவாறே இருந்த தாராவிற்கும் என்ன செய்ய என்று புரியவில்லை…
இனி‌ அவளுக்கு ‌ வேறு வழியின்றிப் போனது… அதுவே அவளுக்குக் குழப்பத்தையும் மனதின் ஓரம் பயத்தையும் உண்டாக்கியது.

தன்னை வெறுக்கும் ஒருவனை எப்படித் திருமணம் செய்வது… அமரனுக்காக என்று பேச்சே இல்லை இங்கே…

தன் பெயருடன் கணவன் என்று அவனைப் பிணைத்து இருக்கும் இந்த உறவு எப்படி இனி‌ வரும் காலங்களில் பயணிக்கும் என்று சிந்தித்தாள். அவளிடம் யாரும் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க வில்லை… அதுவே மனதின் ஓரத்தில் ஒரு முணுமுணுப்பினை உண்டாக்கியது.

அமரனுக்கு உணவினை ஊட்டிக் கொண்டிருந்தாள் தாரிகா... பிள்ளையின் மனதில் தாயின் தங்கையாகச் சிற்றன்னையாக வலம் வந்தாள்… ஆனால் பெற்ற மனம் அவனை அருகிலேயே வைத்துக் கொண்டது… வீட்டிற்கு வந்ததில் இருந்து அவனைக் கீழே வைக்க வில்லை.

அவனும் அவளிடம் ஒட்டிக் கொண்டான்.
ஆனால் உறங்கும் போதும் அவனுக்குத் தாராவின் அருகில் அவள் உடல் சூட்டில் உறங்கினால் தான் ஆழ்ந்த உறங்குவான். என்னதான் அமரன் அவளிடம் ஒட்டிக்கொண்டாலும் தாயாகத் தாராவின் மடியே அவனுக்குச் சரணம்... இதுவே தாரிகாவின்‌ மனதில் ஒரு வலியை உண்டுப் பண்ணியது. இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக் கொண்டாள்.

தன்னால் அனைத்து அவமானங்களையும் தாங்கித் தனக்காக எல்லாம் இழந்து நிற்கும் அவளுக்காக இந்தத் துன்பத்தை ஏற்றுக் கொண்டாள். அதுமட்டுமில்லாமல் தாராவைப் போலே பெற்றவர்கள் முன்னே அவமானப்பட அவளுக்குத் தைரியம் இல்லை. தாராவை வெறுத்து ஒதுக்கும் பெற்றவர்களின் செயலில் மனதில் பயம் உண்டானது. அதானல் தியாகியாவதிற்குத் தயாராகினாள் தாரிகா.

இரு பெண்களும் மனதில் பல துன்பங்களை வைத்துக் கொண்டு நடமாடினார்.

தாராவிற்கு எங்கே தான் சோகமாக வேதனைப் பட்டுக்கொண்டிருந்தாள் அது தாரிகாவைப் பாதிக்கும் என்று எண்ணியவளுக்கு மனதின் வலியைப் பகர முடியவில்லை.

அதே போல் தாரிகாவும்‌ நினைத்தாள். தன் வேதனை எங்கே தாராவைத் தாக்கி விடுமோ என்று‌க் கண்ணீரைக் கட்டுக்குள் வைத்து நடமாடினாள்.

மாலை நேரம் தாராவைத் தேடி வந்தான் அதியமான்.

அவனுக்குத் தன் வீட்டிற்குச் சென்று... திருமணம் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.

அதனால் தாராவிடம் சொல்லி விட்டுப் போக வந்திருந்தான்.

மகனை மடியில் வைத்துக் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தாள்‌
தாரா. சட்டென்று உள்ளே வந்தவனை எதிர் பார்க்கவில்லை அவள்.

'எவ்வளவு தைரியம்… என் அறைக்கு இப்படி வந்து நிற்கிறார்' என்று முறைத்தவளின் முறைப்பும் மென்மையாக இருந்தது போல் உணர்ந்தான்…

மடியில் மகன் இருந்ததால் அவளால் உடனே எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்ததைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டான் அதியமான்.

சின்னவனிடம் “என்ன பண்ணறீங்கச் செல்லம்… அம்மா கூட விளைடாறீங்களா”... என்று குனிந்து அமரனின் கன்னத்தில் முத்தமிட்டான்…

“அப்பா ஊருக்குப் போகணும்.‌.. உங்க இரண்டு பேரையும் விட்டுட்டுப் போகணும் என்றாலே கஷ்டமாக இருக்கிறது”… மெல்லக் கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தான்.

அவனின் அருகாமையும் இந்தப் பார்வையும் அவளுள் சிறு‌ உதறலை உண்டுப் பண்ணியது.

அதியமானின்‌ விழியைச் சந்திக்க மறுத்தவளின் செயலில் அவள் முகத்தைத் தன் இருக்கைகளில் பிடித்துத் திருப்பித் தன்னைப் பார்க்கச் செய்தவன் “நான் வீட்டிற்குப் போகிறேன் தாரா… இன்னும் இரண்டு நாட்களில் நமக்குக் கல்யாணம்… இங்கே இருக்கும் கோயில் வைத்து எளிமையாக நடத்தலாம்.

முதலில் நம் கல்யாணம் நடக்கணும் தாரா.. அதற்குப் பின் சில மாதங்களுக்குப் பின்னர்த் தாரிகா மற்றும் சதீஷ் திருமணம் நாம் நடத்தி வைக்கலாம்” என்றான் தெளிவாக.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று அவனையே‌ப் பார்த்தாள் தாரா.

சரி என்றா! இல்லை… விருப்பம் இல்லை என்றா!

தன் ஆழ் மனதில் பொதிந்துக் கிடக்கும் அவள் காதல் தன் இருப்பிடத்தை உணர்த்திக் கொண்டு இருக்கிறது, அவன் அருகே வரும் நேரத்தில் எல்லாம்.

என்ன செய்வாள்.
அவளுக்குக் காதல்… ஆனால்… அவனுக்கு என்ற கேள்விக்குப் பதில் என்ன…

இப்படிப் பலதும் சிந்திக்கப் பார்த்துக் கொண்டே இருப்பவளிடம் “என்னம்மா.. எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாய்” என்றான் அதியமான்.

அவன் கண்களைப் பார்த்து…‌ “அமரன் உங்க வீட்டு‌ப் பையன்… அவனுக்கு நான் தாய் என்று அடையாளம் வந்த காரணத்திற்காக, நீங்கள் என்னைக் கல்யாணம் செய்யவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை… நான் வேண்டுமென்றால் அவனை விட்டுக் கொடுக்கத் தாயாராக இருக்கேன்… நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப உங்களுக்குப் பொருத்தமான நல்ல பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றாள் தாரா…


அவள் வார்த்தைகளைக் கேட்டவன் ‘பொருத்தமான’ என்ற அவள் சொல்லில் அவன் முகம் மாறியது… ஆனாலும் அவளின் முகத்தில் இருந்து கைகளை எடுக்கவில்லை அவன்.

அவனைத் திருமணம் செய்ய இப்போது வரைக்கும் சரி என்று சொல்லாமல் நிராகரிக்கும் அவளை என்ன செய்ய என்று கோபம் வந்தது அதியமானிற்கு.

மிக அருகில் அவள் முகம்… அவன் விழிகள் அவளை வேட்டையாடிக் கொண்டு இருக்கத் தன் மனதைக் காயப்படுத்தும் அவள் இதழ்களைத் தண்டிக்கத் தீர்மானித்தான்… “என் தகுதிக்குப் பொருத்தமான பெண்ணுக்கு நான் தாலிக் கட்டணும்… அப்படித் தானே” என்று‌ அவளிடம் கேட்டான்.

“இதைத்தானே சொல்லிக் கொண்டு இருக்கிறேன்”… என்று முகம் திருப்பியவளை மீண்டும் தன்னைப் பார்க்கச் செய்தவன் வேகமாக அவள் உணரும் முன்னே அவள் இதழ்களை உணரத்தொடங்கினான்.

அவன் இதழ்த் தீண்ட உண்டான வெப்பத்தின் சூட்டில் அவள் காதலைத் தேடிக் கொண்டு இருந்தான் அதியமான்.

பிள்ளையை மடியில் வைத்து இருக்க… அவனின் அத்துமீறலுக்குக் கட்டுப்பாட்டு நிற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் தாரா.

அவள் நிலையை நன்கு அறிந்த அதியமான் மெதுவாகவே அவள் இதழ்களுக்கு விடுதலைத் தந்தான்.

அதியமான் தந்த முத்தத்தில் அவள் முகம் வெட்கத்தில் சூடேறியது… அதரம் தடித்து... கண்கள் கலங்க அவனைப் பார்த்தவளின் பார்வையில்…

அவனுக்குத் தன் காதலை எல்லாம் அவளுக்கு உணர்த்திவிட மனம் உந்தியது…

‘பார டி, என் நேசத்தை… வேறு பெண்ணைத் தேடவா நான்... என் முன் இதோ எதிர்ப்பைக் கூட மென்மையாகப் பதிய வைக்கும் உன் முன்... தேவதையே தோற்றுப் போகும்’ என்று சொல்ல நினைத்தான்.

கலங்கிய விழிகளில் தன் முத்தத்தினனைக் கடத்தி, பயத்தினால் குளிர்ந்த மனதிற்கு வெப்பத்தைப் புகட்டினான்.
“இன்னும் வேறு பெண்ணை நான் திருமணம் செய்ய வேண்டும் என்று பேசுவாயா, தாரா” என்று அவளிடம் கேட்டான்…

என்ன பதில் சொல்லுவாள்... தன் மௌனத்தையே பதிலாக்கினாள்‌ அங்கே…

“ம்ம் தயாராக இரு…‌ நம் திருமணத்திற்கு... புத்திசாலித்தனமாகச் செய்வதாக… எதாவது குழப்பத்தை‌ உண்டு‌ப் பண்ணாதே… மாமா இப்போது தான் உடல் நிலைத் தேறி வந்து இருக்காரு… அவரைப் பொறுத்தவரை, நீயும் நானும் திருமணமானவர்கள்… நமக்கு ஒரு பையன் இருக்கான்… அதுவே உண்மையாக இருக்கட்டும் தாரா.
அவரை வேதனைப் படுத்த வேண்டாம்” என்று‌ மறை முகமாக அவர் உடல் நிலையைப் பற்றி அவளுக்கு அறிவுறித்தினான்.

அவளுக்குப் புரிந்தது தான்… ஆனால் கட்டாயத்தின் பேரில் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவன் நிலையை நினைத்து வேதனையடைந்தாள்.

எல்லாம் விதி என்று நினைத்துக் கடந்து போகவேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் தாரா.

அவளிடம் விடைபெற வந்தவன் , அவளைப் பதில் சொல்ல முடியாமல் நிற்க வைத்தான் …

“இந்தத் திருமணத்தில் பெரியவர்களின் சந்தோஷம் அடங்கி இருக்கிறது தாரா”…
என்று மீண்டும் நினைவுப் படுத்தியவன்… “நான் வரட்டா” என்று அவளைப் பார்த்தான்.

ஏன் என்று தெரியவில்லை... தன்னை விட்டுப் போகும் அதியமானின் இந்தப் பிரிவினால் அவனைப் பார்த்து அழுதவள் தன்னை மீறி… “நீங்கள் போய்த் தான் ஆகணுமா?” என்று கேட்டாள்.

தாராவின் கேள்வியின் பின் இருக்கும் காரணம் எதுவாக இருந்தாலும் அவனுக்கு அது காதலாகப் புலப்பட்டது.

“இரண்டே நாட்களில் வந்திருவேன்… அங்கே அம்மாவிடம் சொல்லி மத்த ஏற்பாட்டைப் பார்க்க வேண்டும் இல்லையா”…என்றான் அதியமான்.

ம்ம் என்று தலையை ஆட்டியவளிடம் இருந்து பிள்ளையை வாங்கியவன்
அவளோடு வெளியே வந்தான்,

அழகானக் குடும்பமாக இருவரும் காதலோடு புரிதலான வாழ்க்கை வாழ்கின்றனர் என்று நம்பும் படி இருந்தது அதியமானின் செயல் முழுவதும்…

அனைவரிடமும் விடைப்பெற்றவன் அவளைப் பிரிந்துச் செல்வது இன்பமான அவஸ்தையை ஏற்படுத்தியது அவனுள்…

வீட்டிற்குத் திரும்பிச் செல்லும் பயணத்தில் முழுவதும் அவள் மட்டுமே அவன் எண்ணத்தை ஆக்ரமித்து இருந்தாள்.

அவன் மனதில் அடியெடுத்து வைக்க அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் இங்கே பெரிய விஷயமாக இருந்தது அவனுக்கு…

எப்படி நடந்தது… அவளை‌ முதல் முறையாகக் கண்ட நிகழ்வினை அசைப்போட்டவனுக்கு…

அன்றைய தினம் தன்னுடைய மரியாதைக் குறைவான நடத்தைகளைக் கண்டு அதிர்ந்தாளே அன்றி... சிறிதளவுச் சினம் கூட அவள் முகத்தில் தென்படவில்லை என்று அப்பொழுதுத் தான் உணர்ந்தான்.

தவறு தன் தம்பியின் மேல்… அவள் இடத்தில் வேறு யாராக இருந்தாலும் நடந்திருப்பதே வேறு…

நியாயம் கேட்கிறேன் என்று மிகப் பெரிய பிரச்சினைச் செய்து தன் உடன் பிறந்தவளின் வாழ்க்கைக்கு நீதி வாங்கிக் கொடுத்து இருப்பாள்…‌

அவளுக்கு நியாயம் கிடைத்திருக்காமா‌ என்பது சந்தேகம் தான்... கோமாவில் சில காலம் இருந்தவனின் நிலை வைத்து எதுவும் செய்து இருக்க முடியாது... திரும்பி வரும் சதீஷ் என்ன மனநிலை வருவான் என்றும் தெரியாது…

அவன் பிள்ளை மற்றும் காதல் இரண்டையும் காப்பாற்றி இருக்கும் அவள் தூய மனதின் அழகு அவனைக் காந்தமென ஈர்த்தது …

சிறு பெண்ணாக இருந்த போதும் பொறுப்பானவளாக இருந்து எல்லாமே சரியாகத் தான் கையாண்டு இருக்கிறாள்..

நடுவில் அதைத் திசைத் திருப்பி அவளுக்குக் கஷ்டத்தைக் கொடுத்து விட்டேனே என்று வேதனை அடைந்தான்…

என்னை ஏனடி வேண்டாம் என்றாய்… அந்தக் கோபத்தில் தானே‌ இப்படிச் செய்து விட்டேன்… என்று‌ மனதோடு புலம்பிக் கொண்டு வந்தான் அதியமான்.

இனி‌ வரும் காலங்களில் அவளை ராணிப் போல‌ப் பார்த்துக் கொள்கிறேன் என்று சபதம் எடுத்துக் கொண்டான் மனதில்.

இரண்டு வாரத்தில் நடத்த அனைத்தும் அதியமானின் வாழ்க்கையைத் திசைத் திருப்பியது.

தன் நண்பன் இனியனை அழைத்தான் கைப்பேசியில்.

"ஹலோ… இனியா"…
என்று அமைதியாக இருந்தான் அதியமான்.

“என்னடா, போன் பண்ணிட்டு அமைதியாக இருக்கிறாய்.. என்ன விஷயம்… இரண்டு வாரம் இந்தப் பக்கமே உன்னைப் பார்க்கவில்லை என்ன ஆச்சு” என்று கேட்டான் இனியன்.

“இன்னும் இரண்டு நாளில் எனக்குக் கல்யாணம் இனியா” என்றான் அதியமான்.

“யாருக்கு டா” என்று கேட்டான் இனியன்.


“டேய் எனக்குத் தான் கல்யாணம்... சரியாகக் கவனிக்காமல்... கேள்வி மேல் கேள்விக் கேட்காதே” என்றான் அதியமான்.

“ஆமாண்டா… இரண்டு நாளில் கல்யாணம் என்று… நீ சொல்றதை உள்வாங்கவே எனக்கு இரண்டு வாரம் தேவை… இதில் இவன் பேசறான் பாரு... சும்மா விளையாடாதே அதியமான்”… என்றான் இனியன்.


“உனக்கு என் பேச்சைக் கேட்டு விளையாடுவது‌ போல் இருக்கா” என்று கேட்டான் அதியமான்.

“இல்லை… ஏன் இவ்வளவு அவசரம்... பொண்ணு யாரு... நல்லா விசாரித்தாயா… இது வாழ்க்கை‌‌ப் பிரச்சனை... இதில் இவ்வளவு அவசரம் கூடாது அதியமான். நிதானமாகப் பேசி முடிவுச் செய்யலாம்... நீ நேரில் வா‌ ” என்ற இனியவனின் பேச்சைக் கேட்ட அதியமான்…

“நான் சொல்வதை முதலில் பொறுமையாகக் கேளுடா… அப்பறம் சொல்லு எதுவாக இருந்தாலும்”… என்றவன் நடந்த அனைத்தையும் மறைக்காமல் நண்பனிடம் பகிர்ந்தான் அதியமான்.

எல்லாம் கேட்டவன் “புரியுது டா… நம் சதீஷிற்கு நியாபகம் இருக்காடா அவன் காதலித்தது”
என்று கேட்டான் இனியன்.

“அவனுக்குத் தாரிகா அவன் காதலி என்பது நினைவில் இருக்கு டா… அவனுக்கு விபத்து நடந்த அன்றைய தினம் நடந்ததெல்லாம் நினைவில் இல்லைடா இனியா… அது தான் இன்னும் அவன் குழந்தைக்குத் தாயாகி விட்டாள் தாரிகா என்று அறிவிக்க வில்லை” என்றான் அதியமான்.

“எல்லாம் சரி தான் ஆதி… இது சரி வருமா… எதிர்காலத்தில் எதாவது குழப்பத்தை‌ உண்டுப் பண்ணாதா”… என்றான் இனியன்.

“நீ என்ன சொல்ல வர‌ என்று தெரிகிறது… இப்போது வரை தாரிகா நினைத்து இருந்தாள் உண்மையைச் சொல்லி இருக்கலாம். ஆனால் சொல்லவில்லை…‌ அதே‌ போலக் குழந்தையிடம் சித்தியாகத் தான் பழகறாளே அன்றி ஒரு தாயாக எங்கேயும் காட்டிக்க மாட்டேங்கிறாள்... தாராவிற்கு நடப்பதெல்லாம் அவளுக்கு நடக்க வேண்டியது… மனதில் வருத்தம் இருந்த போதும் அதெல்லாம் வெளியே காட்டிக்கொள்ளவில்லை இனியா... தாரா அதை‌ எதிர்பார்க்கவும் இல்லை. பிள்ளைக்குத் தாயாகவே வாழ்ந்து வருகிறாள்… உனக்கு நான் சொல்ல வருவது புரியுதா?” என்று கேட்டான் அதியமான்.

“தெளிவாகப் புரியுது டா…‌ரொம்பச் சேஃ ப்ளேவோ அவள்” என்று‌ வெளிப்படியாகச் சொல்லி விட்டான் இனியன்.

"ம்ம் அப்படியும் சொல்லலாம்… என்றவன் ஒரு மௌனத்திற்குப் பின் எல்லாம் எதிர்காலத்தில் தெரிந்துக் கொள்ளலாம் இனியா யார் எப்படி என்று…‌விடு" என்றவன்…

“என் திருமணத்திற்கு… நீ தான் எனக்கு எப்பவுமே போலச் சப்போர்ட் பண்ணணும்” என்றவன்… இனி‌ என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று கூறினான் அதியமான்.

அவனுக்குத் தோள் கொடுக்கும் தோழன் இனியனிடம் எல்லாம் பகிர்ந்துக் கொண்டான்… மனதில் என்ன எண்ணுகிறான்… அவளை எந்த அளவுக்குக் காதிலிக்கிறான்… எங்கே காதலில் வீழ்ந்தான் எல்லாம் மனம் விட்டுப் கூறினான் அதியமான்.

நண்பனின் வார்த்தைகளுக்கெல்லாம் செவிச் சாய்தவன், “எல்லாம் சரி தான்… உன்னை அவள் ஏன் வேண்டாம் சொன்னாள் என்று கேட்டாயா அவளிடம்” என்று‌க் கேட்டான்.

“இல்லை… என் மனைவி ஆனது பின்னர் அதைப்பற்றிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான் அதியமான்.


“உனக்குக் காதல் பித்துத் தலைக்கேறி இருக்கிறது… நான் என்ன சொன்னாலும் புரியாது… முதலில் உன் வீட்டில் பேசு டா மத்த ஏற்பாட்டை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினான் இனிவன்.

"ஆமாம் டா…‌அம்மாவிடம் எப்படி இதைப் பற்றிப் பேச என்று தான் தெரியவில்லை.
அவங்கப் புரிந்துக் கொள்ளுவாங்களா? என்ற சந்தேகமும் மனதில் இருக்கிறது" என்றவன் சிறு‌ மௌனத்திற்குப் பின் "எனக்கு இன்னொரு உதவியும் நீ செய்ய வேண்டும்" என்று சொன்னான் அதியமான்.

“என்னடா, புதுச உதவி என்றெல்லாம் அசிங்கமாகப் பேசற… இதைப் பண்ணு என்று சொன்னால் பண்ணிட்டுப் போறேன்” என்றான் இனியன்.

"தாரா இருக்கும் அப்பார்ட்மெண்டில் இரண்டாம் தளத்தில் பெரிய வீடு இருக்கு... அது முடிஞ்சால் எனக்குக் கிடைக்குமா என்று பாரு டா" என்றான் அதியமான்.

"எதுக்கு டா" என்ற இனியனிடம்...
"இல்லை எதுக்கும் இருக்கட்டும் டா" என்றான் அதியமான்.

"எதுவாக இருந்தாலும் பொறுமையாக யோசிச்சு முடிவு எடுடா" என்றான் இனியன்.

"ம்ம் புரியுது" என்றவன் அதியமான்.
இனியனிடம் பேசிய படியே தன் காரைத் தங்கள் வீட்டுக் காம்பவுண்டு உள்ளே கொண்டு வந்து நிறுத்தினான். வேகமாக வீட்டிற்கு உள்ளே‌ச் சென்று‌‌த் தன்‌ அம்மாவைத் தேடினான்.

சமையலறையில் இருந்தார் சாந்தி.

தன்னைத் தேடிச் சமையலறை வரை வந்திருக்கும் தன் மூத்த மகனின் செயலில் அதிர்ச்சியானது சாந்திக்கு.

இதென்ன புதிதாக என்று மனதில் சிந்தித்தவர்…
“என்ன தம்பி… இங்கேயே தேடி வந்திருக்க…எதாவது முக்கியமான விஷயமா” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார் சாந்தி.

“ம்ம்…‌ஆமாம்‌ அம்மா…‌முக்கியமான‌ விஷயம் தான்... நான் போய்க் குளிச்சுட்டு வரேன் எனக்கு டீ மட்டும் போட்டு வைங்க வந்து அதை உங்களிடம் சொல்றேன்” என்று தன் அறையை நோக்கிச் சென்றான் அதியமான்.

போகும் பெரிய மகனையே பார்த்தச் சாந்தியம்மாவிற்கு மனதில் ஏதோ தவறாகப்பட்டது.எதுவாக இருந்தாலும் மகன் வரட்டும் என்று மனதில் நினைத்தார்.

வேகமாகத் தன்னைச் சுத்தப்படுத்தி வந்தவனுக்கு எப்படித் தன் தாயிடம் கூறுவது என்று தெரியவல்லை.

தன் தாய்த் தந்த டீக்கோப்பையைக் கையில் வாங்கியவன், " உங்களிடம் எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை அம்மா... நீங்கள் என்னைத் தவறாக நினைத்து விட்டால் என்ற பயம் மனதில் இருக்கு… அது மட்டும் இல்லாமல் இந்த விஷயம் உங்களுக்கு வேதனையைத் தரும்" என்று பீடிகையோடு பேசினான் அதியமான்.

“நீ என் கூட இருக்கும் வரையில் எனக்கு என்ன தம்பி பயம்… எந்தப் பிரச்சனையும் ‌எங்களை‌ அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... நீ தயங்காமல் சொல்லு” என்றார், சாந்தியம்மா.

தயங்கித் தயங்கித் தான் சொல்ல வந்ததைக் கூறத் தொடங்கினான் அதியமான்.

"இரண்டு நாட்களில் எனக்குக் கல்யாணம் முடிவுப் பண்ணி இருக்கேன் அம்மா"என்றான் அதியமான்.

"என்ன இரண்டு நாளில் திருமணமா" என்று அதிர்ச்சியானவர்.. "என்ன தம்பி சொல்லற.. பொண்ணுப் பார்க்க வேண்டாமா?" என்றும் அவனிடம் அப்பாவியாகக் கேட்டார் அதியமானின் அம்மா.

"பொண்ணு... நீங்கள் சதீஷிற்குப் பார்த்தப் பொண்ணுத்தான், தாரிகாவோடு உடன் பிறந்த தாரா" என்றான் அதியமான்.

"அந்தப் பொண்ணு உன்னை வேண்டாம் என்று சொல்லி விட்டாளே‌‌த் தம்பி"… என்றார், சாந்தி.

"என் மேல் இருக்கும் கோபத்தில் தான் அம்மா, அப்படிப் பேசி விட்டாள்" என்றான்.

குழப்ப ரேகை முகத்தில் படிய "புரியும் படிச் சொல்லுப்பா" என்றார்…

மெல்லக் குரலைச் சொருமியவன்…
"அது… எனக்கு ஒரு பையன் இருக்கான்… அவனுக்கு அவள் தான் அம்மா" என்று மகன் கூறியது கேட்டு அதிர்ச்சியில் கையில் இருந்த பொருளை நழுவ விட்டார்ச் சாந்தி.

அவரின் நிலை நன்றாக உணர முடிந்தது மகனுக்கு… இது சாதாரண விஷயம் அல்லவே…
கங்காதரனிடம் என்ன சொன்னானோ அதே கதையைத் தன் தாயிடமும் சொன்னான் அதியமான்.
மகனின் வராத்தைகளை எல்லாம் கேட்டு அமைதியாக இருந்தார் சாந்தியம்மா.

எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் தாயைக் கண்ட அதியமான் அவரிடம் " என்னம்மா எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க" என்று கேட்டான்.

"என்ன சொல்லத் தம்பி... புருஷனோட அம்மா வந்து தான் பொண்ணுக் கேட்கறாங்க என்று தெரிந்தும், அவள் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி இருக்காளா?" என்ற தாயின் கேள்வியில் அதியமானின் மனதின் ஓரத்தில் ஒரு வேதனைப் படரத் தொடங்கியது.

இந்தத் திருமணத்தில் தாராவின் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்தது.

ஆனாலும் அவன் நேரிமறைப் பண்பு அவன் தாயை நம்பச் சொன்னது…

"என்னம்மா எதுவும் சொல்லாமல் இருந்தால் நான் என்ன செய்ய… எதாவது சொல்லுங்க" என்றான் அதியமான்.

இந்தக் குடும்பம் நல்ல நிலையில் இருக்கக் காரணம் அதியமான் தான். தன் இரண்டாவது மகனுக்கு இவன் அளவுக்குச் சாமர்த்தியம் இல்லை என்பது நன்றாகத் தெரியும் சாந்திக்கு.

பெரிய மகன் திருமணம் முடிந்து அவனுக்கு ஒரு வாரிசு வருவதற்குள் சதீஷிற்கு இந்தச் சொத்தில் பாதி எழுதி வைக்க வேண்டும் என்றும் அதற்குள் பெரிய மகனிடம் பேசி அதெல்லாம் நடந்தியப் பின் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்தார்... தாயல்லவா, திறமைக் குறைவாக இருக்கும் இரண்டாம் பிள்ளை மேல் அவருக்குக் கரிசனம் மற்றும் அன்பு அதிகம் இருந்தது. பெரியவன் பிடிக்காது என்றில்லை அவன் பிழைத்துக்கொள்வான் என்ற நம்பிக்கை.

தாரிகாவின் உடன் பிறந்தவள் என்றால் ஒற்றுமையாக இருவரும் ஒரே வீட்டில் இருக்கலாம் என்று நினைத்தார்… ஆனால் தன் பிளைளயைத் திருமணம் செய்து.. பிள்ளையும் பெற்று... பெண் கேட்கப் போன போது கணவனின் தாய் என்று‌ மரியாதை இல்லாமல் திருமணத்தை நிராகரித்தது அவருக்கு இப்போது அவமானமாக உணர்ந்தார்.

இருவரும் ரகசியமாகக் குடும்பம் பிள்ளை என்று வாழ்ந்து இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை… இந்த விஷயத்தினால் தாராவின் மேல் அவருக்குத் தவறான எண்ணம் தோன்றியது.

என்ன செய்வது வேண்டாம் என்று சொல்லும் இடத்தில் அவர் இல்லை.
மகனுக்கு எதிராக அவரால் எதுவும் செய்ய முடியாது நிலையிக்குத் தள்ளப் பட்டார்… அவரின் இந்த இயலாமையினால் தாராவின் மேல் வன்மத்தை உண்டாகியது.

அவர் மனவோட்டம் அறியாமல் “அம்மா நான் முகூர்த்தத் தேதியும் நேரமும் எல்லாம் பார்த்து விட்டேன்… நாம் தாயாராக வேண்டியது தான் பாக்கி” என்றவன்…

“திருமணத்திற்கு வேண்டியது எல்லாம் இனியன் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டான்… நம் குடும்பத்துக்கும், கல்யாணப் பொண்ணுக்கும்‌‌ உடைகள்‌ எடுக்கணும்‌” என்றான்‌ அதியமான்.

“புரியுதுப்பா… உன் தம்பிக்கு முடியாமல் இருக்கும் நேரத்தில் அவனை விட்டுட்டு அலைய முடியாதே” என்று அவர் மறுத்த விதம் மனதில் ஒரு வலியை உண்டு‌ப் பண்ணியது.

“சரிம்மா
நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சென்று விட்டான் அதியமான்.

பெரிய மகனின் வேதனையை உணரத் தவறிவிட்டார், சாந்தி.

தாயின் மனமோ இப்படி இருக்கப் புதிதாகப் பூத்தக் காதலில் திண்டாடினான்‌... தாராவின் ஆதி.

தொடரும்…
 
Top